/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் இல்லை; குடிநீர் பற்றாக்குறை அவதியில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள்
/
ரோடு, வாறுகால் இல்லை; குடிநீர் பற்றாக்குறை அவதியில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள்
ரோடு, வாறுகால் இல்லை; குடிநீர் பற்றாக்குறை அவதியில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள்
ரோடு, வாறுகால் இல்லை; குடிநீர் பற்றாக்குறை அவதியில் விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள்
ADDED : செப் 16, 2024 06:42 AM

விருதுநகர் : ரோடு, வாறுகால் இல்லாததால் மழைக்காலத்தில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை, சர்வீஸ் ரோட்டில் வைத்திருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றம், கூடுதல் மேல்நிலைக் குடிநீர் தொட்டி இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் சத்திரரெட்டியப்பட்டி ஊராட்சி பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள்.
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியப்பட்டி ஊராட்சியின் பஞ்சாயத்து காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதிக்கு செல்ல சர்வீஸ் ரோட்டில் இருந்து செல்லும் பிரதான ரோடு இன்றுவரை மண்ரோடாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
குடியிருப்புகள் அதிகமாக இருந்தும் தெருக்களில் வாறுகால்கள் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. மழையின் போது மழை நீர், கழிவு நீர் கலந்து ரோட்டில் ஆறாக ஓடுகிறது. தெருக்களில் தேவையான அளவிற்கு கூட மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை.
இங்குள்ள மக்களின் தேவைக்கு ஏற்ப மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்படவில்லை. தெருக்களில் குப்பைத் தொட்டிகள் இல்லை.
பஞ்சாயத்து காலனியில் உள்ள காலி இடத்தில் கூடுதலாக மேல்நிலைக் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். மேலும் அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தில் இணைப்புகளை கொடுத்து குடிநீர் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனசேகர், ஓய்வு போலீஸ் எஸ்.ஐ.,
இப்பகுதியில் முறையாக ரோடுகள் எதுவும் இன்றி மண்ரோடாக கடந்த 10 ஆண்டுகளாக உள்ளது. இதனால் குழந்தைகளுடன் வாகனங்களில் செல்ல முடிவதில்லை. மழைக்காலத்தில் வாகனங்கள் சேற்றில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.
- ராதாகிருஷ்ணன், குடியிருப்போர்.
வீடுகளில் சேரும் குப்பையை கொட்டுவதற்கு தெருக்களில் குப்பைத் தொட்டிகள் இல்லாததால் காலி இடங்களில் கொட்ட வேண்டிய நிலை உள்ளது. இதில் சிலர் தீ வைப்பதால் வரும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- பூங்கொடி, குடும்பத் தலைவி.

