/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜானகிபுரம் ரவுண்டானாவில் தாலுகா காவல் நிலையம்... அமைக்கப்படுமா:தேசிய நெடுஞ்சாலையில் குற்ற சம்பவங்களை தடுக்கலாம்
/
ஜானகிபுரம் ரவுண்டானாவில் தாலுகா காவல் நிலையம்... அமைக்கப்படுமா:தேசிய நெடுஞ்சாலையில் குற்ற சம்பவங்களை தடுக்கலாம்
ஜானகிபுரம் ரவுண்டானாவில் தாலுகா காவல் நிலையம்... அமைக்கப்படுமா:தேசிய நெடுஞ்சாலையில் குற்ற சம்பவங்களை தடுக்கலாம்
ஜானகிபுரம் ரவுண்டானாவில் தாலுகா காவல் நிலையம்... அமைக்கப்படுமா:தேசிய நெடுஞ்சாலையில் குற்ற சம்பவங்களை தடுக்கலாம்
ADDED : டிச 27, 2025 05:50 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே புறவழிச்சாலையில், வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கவும், விபத்து மீட்பு பணிகளுக்காகவும் ஜானகிபுரத்தில் தாலுகா காவல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூரில் துவங்கி, அரசூர் அடுத்த சித்தானங்கூர் வரை 75 கி.மீ., துாரம் செல்கிறது.
இச்சாலை வழியாக திருச்சி, சென்னை, மதுரை, கோவை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பிரதான தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஒலக்கூர் மற்றும் எடைக்கல் ஆகிய இரண்டு காவல் நிலையங்கள் மட்டுமே உள்ளன.
இதைத்தவிர உளுந்துார்பேட்டை, திருநாவலுார், திண்டிவனம் ஆகிய காவல் நிலையங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கி.மீ., அல்லது 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.
இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் சுலபமாக தப்பி விடுகின்றனர்.
இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியாகவும், விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை துவங்கும் பகுதியாக உள்ள ஜானகிபுரம் ரவுண்டானா அருகே தாலுகா காவல் நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் நகரில் மேற்கு, டவுன் மற்றும் தாலுகா ஆகிய 3 காவல் நிலையங்கள் அமைந்துள்ளது. இதில், மேற்கு மற்றும் டவுன் காவல் நிலையங்கள் நகராட்சி வார்டுகளை எல்லையாகக் கொண்டு செயல்படுகிறது.
ஆனால், தாலுகா காவல் நிலையமானது, நகராட்சியில் 8 வார்டுகளையும், விழுப்புரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள 58 கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இப்படி கிராமங்களை அதிகளவில் கொண்டுள்ள தாலுகா காவல் நிலையம், விழுப்புரம் நகராட்சியில் டவுன் காவல் நிலைய எல்லையில் செயல்பட்டு வருகிறது.
இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் பொதுமக்கள் நகருக்குள் சென்று புகார் கொடுத்து வருகின்றனர்.
மேலும், கிராமப்புறங்களில் நடக்கும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்கு போலீசார் நகரில் இருந்து சென்று தீர்வுகாணும் சூழல் உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், கிராமங்களில் நடக்கும் பிரச்னைக்கு உடனடியாக செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தை ஜானகிபுரத்திற்கு இடமாற்றம் செய்யலாம் என காவல் துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், ஜானகிபுரத்தில் காவல் நிலையம் செயல்பட்டால், புறவழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்ய முடியும்.
கிராமங்களில் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளுக்கும் துரிதமாக சென்று தீர்வு காண முடியும். இதேபோன்று, புறவழிச்சாலையில் ஏற்படும் வாகன விபத்து மீட்பு பணி, போக்குவரத்து நெரிசல்களுக்கும் உடனடியாக சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என காவல் துறையினர் கூறுகின்றனர்.
எனவே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை துவங்கும் ஜானகிபுரம் ரவுண்டானாவில் தாலுகா காவல் நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

