/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது... எப்போது?; சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை
/
பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது... எப்போது?; சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை
பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது... எப்போது?; சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை
பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது... எப்போது?; சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 13, 2025 06:55 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய புறவழிச்சாலையை இணைக்கும் பிரதான கே.கே. சாலையில், நீண்டகாலஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரத்தில் நகரின் பிரதான சாலைகள் ஆக்கிரமிப்பில் குறுகியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக நகரின் மையத்தில், நேருஜி சாலை (புதுச்சேரி, கடலுார் சாலை) சிக்னல் சந்திப்பில் துவங்கி, ரயில் நிலையம் வரை, மிகவும் குறுகிய நிலையில் நெரிசலோடு காணப்படுகிறது.
இதற்கு மாற்றாக உள்ள கே.கே.சாலையும், ஆக்கிரமி ப்புகளால், குறுகி உள்ளது. இந்த சாலை ஏராளமான வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், வங்கிகள், மண்படங்கள், கடைகள், குடியிருப்புகள் மிகுந்த முக்கிய வணிக வீதியாக உள்ளது.
நெரிசல் மிகுந்த நேருஜி சாலையின் வாகனங்கள் இதன் வழியாக பாதியளவு திரும்பி செல்கின்றன. மொத்தம் 10 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலை, ஆரம்ப காலம் முதலே ஆக்கிரமிப்பில் பாதியளவு அடைந்து கிடக்கிறது.
மேலும், இருபுறமும் கடைகளுக்கு முன் வாகனங்கள் நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சாலையை புதிய பஸ் நிலையம், திருச்சி நெடுஞ்சாலைக்கு மாற்று சாலையாக பலர் பயன்படுத்துகின்றனர். தற்போது, இந்த சாலை சாலாமேடு வழியாக புதுச்சேரி - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்கு இணைப்பு சாலையாகவும் அமைந்துள்ளது.
புதுச்சேரி பைபாஸ் இணைப்பு சாலை புதுச்சேரி புதிய புறவழிச் சாலையில் வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வருவதற்கு இந்த சாலையையே தற் போது பயன்படுத்துகின் றனர்.
இதற்காக நகர பகுதியில், 5 கி.மீ., சாலையை, சாலாமேடு வரை அகலப்படுத்தி நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்துள்ளனர். ஆனால், சாலாமேடு, 'முக்தி' பகுதியிலிருந்து, கே.கே.சாலை முழுவதும், 2 கி.மீ., மட்டும் அகலப்படுத்தாமல், ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதால், வாகனங்கள் சென்றுவர நெரிசல் நிலை தொடர்கிறது.
இந்த கே.கே.சாலையின் துவக்கத்திலேயே, மிகப்பெரிய டிரான்ஸ்பார்மர் ஆக்கிரமித்துள்ளது. நகரின் மிக முக்கிய பிரதான சாலையில், கடந்த 40 ஆண்டுகளாக இந்த டிரான்ஸ்பார்மர் சாலையின் மையத்தில் உள்ளது.
மேலும் இந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து பிரிந்து செல்லும் எச்.டி. மற்றும் எல்.டி. மின் இணைப்புகளுக்கான மின் கம்பங்களும், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இந்த குறுகிய சாலையில் மட்டும், 9 டிரான்ஸ்பார்மர்கள் ஆக்கிரமித்துள்ளன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த சாலையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சிக்கும் போது, டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்களை அகற்றாமல் தொடர்வதால், அதன் ஓரமாக மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து, ஆக்கிரமித்து கொள்கின்றனர்' என்றனர்.
நகராட்சி சார்பில், கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, 'சாலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்களை அகற்றிவிட்டு கடை ஆக்கிரமிப்பை எடுக்க வாருங்கள்' என வியாபாரிகள் தடுத்ததால், அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'நகரின் பிரதான சாலையான கே.கே.சாலையில் ஆக்கிரமித்துள்ள டிரான்ஸ்பார்மர்களையும், மின்கம்பங்களையும் அகற்றி ஓரமாக நிறுவ வேண்டும். அதன் பிறகே, 10 மீ., அகலம் கொண்ட இந்த சாலையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு அகலப்படுத்த முடியும். இது குறித்து மின்வாரியம், நகராட்சிக்கும் பல முறை கடிதம் வைத்தும் நடவடிக்கை இல்லை,' என்றனர்.