/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள்... தீவிரம்: மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை
/
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள்... தீவிரம்: மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள்... தீவிரம்: மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள்... தீவிரம்: மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை
ADDED : டிச 25, 2025 06:29 AM

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டு விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்காமல் விவசாயிகள் பலரும், தங்களின் கால்நடைகளை வளர்த்து பொருளாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.
கால்நடைகளை வளர்க்க அரசு மூலம் மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் விவசாயம் பொய்த்த தருணங்களில் கால்நடைகள் மூலம் தங்களின் பொருளாதாரத்தை ஈடுகட்டி சமாளிக்கின்றனர்.
இந்த கால்நடைகள் நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும், கால்நடை மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கால்நடை மருத்துவமனைகள் ஆங்காங்கே உள்ளதால் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை நோய்கள் தாக்காமல் காண்பித்து, நல்ல ஆரோக்கியத்தோடு வைத்து கொண்டு பொருளாதாரத்தை ஈட்டி வருகின்றனர்.
இதில், கோமாரி நோய் என்பது பிளவுபட்ட கால் குளம்புகள் உடைய பிராணிகளை தீவிரமாக தாக்க கூடிய ஒரு வைரஸ் மற்றும் நச்சு உயிரி நோயாகும். இதற்கு கால் மற்றும் வாய் நோய், காணை நோய் எனவும் அழைக்கப்படும். மாடு, ஆடு, பன்றி, மான், யானை ஆகிய விலங்குகளை இந்த வைரஸ் நோய் தாக்குகிறது.
இந்த நோயால் கால்நடைகளுக்கு கடும் காய்ச்சல் உண்டாவதோடு, மிகவும் எளிதாக மற்ற கால்நடைகளுக்கு தொற்ற கூடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்த கால்நடைகள் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நுால் போல் தொங்கி கொண்டி ஒழுகும். அசைபோடும் போது, 'சப்பு கொட்டுவது' போல் சப்தம் ஏற்படும்.
வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, மடி, கால் குளம்புகளின் நடுப்பகுதி ஆகியவற்றில் கொப்பளங்கள் தோன்றி உடைந்து புண்ணாகும்.
இதனால் ஏற்படும் வலி, எரிச்சலால் எச்சில் தொடர்ந்து உற்பத்தியாகி ஒழுகி, குளம் போல காட்சியளிக்கும்.
கால்நடை தீவனம் உட்கொள்ளாது. சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். கன்றுகள் பாதித்த பசுக்களின் பாலை அருந்துவதால் கன்றுகளுக்கு நோய் தாக்கப்பட்டு இறக்க நேரிடும்.
இந்த வைரஸ் நோய் மூளையை பாதிப்பதால் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க கூடிய ஒரு பகுதி தாக்கப்பட்டு, பாதிப்பிற்கு உள்ளான கால்நடைகளில் உடலின் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும். இதனால், கால்நடைகள் இறக்க நேரிட்டு, விவசாயிகளின் பொருளாதாரம் முற்றிலுமாக பாதிக்கும்.
கால்நடைகளை தாக்கும் இந்த கொடிய வைரசான கோமாரி நோய் பனி காலங்களின் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதையொட்டி, இந்த நோய் கால்நடைகளை தாக்காமல் இருப்பதற்காக, அரசு கால்நடை துறை மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. விழுப்புரம் கோட்டத்தில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 200 கால்நடைகளும், திண்டிவனம் கோட்டத்தில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 500 கால்நடைகள் உட்பட மொத்தம் 4 லட்சத்து 53 ஆயிரத்து 700 கால்நடைகள் உள்ளன.
இந்த கால்நடைகளுக்கு வரும் 29ம் தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாட்கள் கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள 97 தடுப்பூசி போடும் குழுக்கள் மூலம் தேசிய விலங்கின நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 8 வது சுற்று கோமாரிநோய் கட்டுப்படுத்தும் திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த பணிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கவுள்ளது. இந்த தடுப்பூசி போடுவதால், கால்நடைகள் கோமாரி நோய் தாக்குதலில் பாதிக்காமல் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்து விவசாயிகளின் பொருளாதாரம் சிறக்க வழிவகுக்கும்.
விவசாயிகள் இதை பயன்படுத்தி தங்களின் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு கொண்டு பயன்பெற வேண்டும்.

