/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மை செயலர் நேரில்... ஆய்வு; தரமாகவும், விரைந்தும் முடிக்க உத்தரவு
/
வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மை செயலர் நேரில்... ஆய்வு; தரமாகவும், விரைந்தும் முடிக்க உத்தரவு
வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மை செயலர் நேரில்... ஆய்வு; தரமாகவும், விரைந்தும் முடிக்க உத்தரவு
வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மை செயலர் நேரில்... ஆய்வு; தரமாகவும், விரைந்தும் முடிக்க உத்தரவு
ADDED : செப் 18, 2024 11:18 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அரசு முதன்மைச் செயலாளர் ஹர்சஹாய்மீனா, திட்டப்பணிகளை அரசு வழிகாட்டுதல்படி தரமாகவும், குறித்த காலத்திலும் முடித்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி தென்னகரம் கிராமத்திலும், மயிலம் ஒன்றியம் மயிலம் ஊராட்சியிலும், விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, அரசு முதன்மைச் செயலாளர் (திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை) மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சஹாய்மீனா நேற்று காலை தொடங்கி மதியம் வரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் பழனி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆய்வு குறித்து, அரசு முதன்மைச் செயலாளர் கூறியதாவது:
வானூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கிழ் தலா ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 900 மதிப்பீட்டில், செந்தில்குமார், கௌரி ஆகிய பயனாளிகள், அரசின் கான்கிரிட் வீடுகள் கட்டிவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தரம் குறித்து விசாரித்தோம்.
தொடர்ந்து வானூர் ஒன்றியத்தில் நடப்பாண்டில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மண்வளத்தை மேம்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் சணப்பை பசுந்தாள் உர விதைகள் 9,450 கிலோ வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தென்னகரம் ஊராட்சியில் 4 ஏக்கர் விவசாய நிலத்தில் விஸ்வேஸ்வரன் உள்ளிட்ட 3 விவசாயிகள் ஒன்றிணைந்து, சணப்பை பசுந்தாள் உர விதைகள் விதைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அங்கு சணப்பை, பசுந்தாள் உரப்பயிர் விதைகள் விதைப்பு செய்யப்பட்டு 25 நாட்கள் ஆகிறது.
மேலும் 45 நாட்கள், அதாவது பூப்பூக்கும் தருணத்தில் இதனை வயலில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணில் உள்ள கரிமச்சத்துக்களின் அளவை அதிகரித்து, அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிரில் அதிக மகசூல் கிடைக்கும், அதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 11 ஏக்கர் பரப்பளவில் அரசு மானியமாக ரூ.4.5 லட்சம் மற்றும் விவசாயி பங்குத் தொகையாக ரூ.1.51 லட்சமும், செலவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் பிறகு, வெள்ளிமேடுபேட்டை-புதுச்சேரி வரையிலான நெடுஞ்சாலையில் ரூ.124 கோடி மதிப்பீட்டில் 15.2 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, அப்பணிகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்து, பணிகள் தரம் அறிந்து, முடுக்கிவிடப்பட்டது.
இதனையடுத்து, மயிலம் ஒன்றியம் தழுதாளி அருகே சாலையின் இருபுறங்களிலும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், அரசு வழிகாட்டுதலின்படி சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா மற்றும் சாலையின் தரம்குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை விரைந்து முடித்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மயிலத்தில், பிரதமரின் ஜன்மந்த் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.07 லட்சம் வீதம் ரூ.23.32 கோடி மதிப்பீட்டில் 46 இருளர் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், அங்கு கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை முடித்து, பயனாளியிடம் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எல்லீஸ் அணைக்கட்டு
இதனையடுத்து, விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலத்தில் ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் எல்லிஸ் சத்திரம் அணைக்கட்டினை நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு நடந்து வரும் இறுதிக்கட்ட பணிகள், அதில் விவசாயிகள் குறிப்பிட்ட சில குறைகளை நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

