/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி பகுதி காடுகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? விக்கிரவாண்டியில் இறந்த சிறுத்தையால் வனத்துறையினர் குழப்பம்
/
செஞ்சி பகுதி காடுகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? விக்கிரவாண்டியில் இறந்த சிறுத்தையால் வனத்துறையினர் குழப்பம்
செஞ்சி பகுதி காடுகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? விக்கிரவாண்டியில் இறந்த சிறுத்தையால் வனத்துறையினர் குழப்பம்
செஞ்சி பகுதி காடுகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? விக்கிரவாண்டியில் இறந்த சிறுத்தையால் வனத்துறையினர் குழப்பம்
ADDED : நவ 08, 2025 02:09 AM
செஞ்சி: விக்கிரவாண்டி அருகே இறந்து கிடந்த சிறுத்தை எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியாமல் வனத்துறையினரை குழப்பத்தில் உள்ளனர். அதே நேரத்தில் செஞ்சி அடுத்த அன்னமங்கலம், சண்டிசாட்சி மலையில் இன்று வரை சிறுத்தைகள் வசித்து வருகின்றனவா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
விக்கிரவாண்டி டோல்கேட் அருகே வராகநதி மேம்பாலத்தில் கடந்த 5ம் தேதி இரவு 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது. இந்த சிறுத்தையை விழுப்புரம் மாவட்ட வனத்துறையினர் மீட்டு அடுக்கம் வனப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்து எரித்தனர். இந்த சிறுத்தை ஒரு கண் பார்வை இழந்து காணப்பட்டுள்ளது.
கடுகளே இல்லாத விக்கிரவாண்டி பகுதிக்கு சிறுத்தை எங்கிருந்து வந்திருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனுார் பகுதியில் சில ஆண்டாக மர்ம விலங்கு தாக்கி கால்நடைகள், நாய்கள் இறந்தன. செஞ்சி காட்டில் மான் ஒன்றும் இறந்தது. செஞ்சி பகுதியில் கால்நடைகள் இறந்த இடத்தில் மர்ம விலங்கின் கால் தடங்களை வனத்துறையினர் சேகரித்திருந்தனர்.
இறந்து கிடந்த சிறுத்தையின் கால்தடம், வனத்துறையினர் சேகரித்து வைத்திருந்த மர்ம விலங்கின் கால் தடமும் ஒத்து போகவில்லை.
இதனால், கால்நடைகளை தாக்கி வருவது சிறுத்தை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் செஞ்சி அடுத்த அன்னமங்கலம், சண்டிசாட்சி மலைகளை ஒட்டிய இல்லோடு, சமத்தகுப்பம், சோழங்குணம் கிராமங்களில் கால்நடைகளை வனவிலங்கு தாக்கி கொன்றது. சில இடங்களில் கால்நடைகளை தாக்கி மலை மீது துாக்கிச் சென்றது.
அப்போது நடந்த ஆய்வின்போது அங்கிருந்த விலங்கின் எச்சம் மற்றும் கால் தடத்தைக் கொண்டு கால்நடைகளை தாக்கியது சிறுத்தை என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். கண்காணிப்பு கேமரா பொருத்தினர். இருந்தும் சிறுத்தை பிடிபடவில்லை. கோடை காலம் முடிந்ததும். சிறுத்தையின் தாக்குதல் நின்றது. இதன் பிறகு சிறுத்தையை தேடும் பணியை வனத்துறையினர் கைவிட்டனர்.
இந்த சம்பவங்கள் முடிந்து 11 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது மீண்டும் சிறுத்தை குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு இரவில் சிறுத்தை 40 கி.மீ., துாரத்தை கடந்து வேட்டைக்கு செல்லும் இயல்புடையது.
செஞ்சி அடுத்த அன்னமங்கலம் மலை நேற்று முன்தினம் சிறுத்தை இறந்து கிடந்த விக்கிரவாண்டி பகுதியில் இருந்து 40 கி.மீ., தொலைவிலேயே உள்ளது.
எனவே அன்னமங்கலம் மலை மீதிருந்து சிறுத்தை சென்றிருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் அன்னமங்கலம், சண்டிசாட்சி மலைகளில் தீவிர ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அன்னமங்கலம் மலையை ஒட்டிய கிராமங்களில் விவசாய கிணற்றில் விழுந்த 2 மான்களை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர். சில மாதத்திற்கு முன்பு அன்னமங்கலம் மலையை ஒட்டிய சேத்துப்பட்டு சாலையில் வாகனத்தில் அடிபட்டு மான் இறந்தது.
இதன் மூலம் அன்னமங்கலம் மலையில் மான்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே மான் உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க தற்போது சமூக காடுகள் திட்டத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அன்னமங்கலம், சண்டிசாட்சி மலைகளை வனத்துறை கையகப்படுத்தி காப்பு காடுகளாக அறிவிக்க வேண்டும்.

