/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வியாபாரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
/
வியாபாரி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : பிப் 18, 2025 06:21 AM

விழுப்புரம்; மயிலம் அருகே வியாபாரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் வாலிபர் உட்பட 3 பேருக்கு, திண்டிவனம் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ், 60; பெட்டி கடை வைத்திருந்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரமேஷ், 37; இருவருக்கும் இடையே இடம் பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், காமராஜ் பில்லி, சூனியம் வைத்ததால்தான் தனது குடும்பம் கஷ்டப்படுவதாக கருதிய ரமேஷ், காமராஜை கூலிப்படை மூலம் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அதன்படி சென்னை, வேளச்சேரி ஜெயக்குமார் மகன் சரத்குமார், 28; தஞ்சாவூர் அடுத்த திருவையாறு குணசேகரன் மகன் தினேஷ்குமார், 19; ஆகியோருடன் சேர்ந்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இரவு 10:30 மணிக்கு பைக்கில் சென்ற காமராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து காமராஜ் மனைவி மலர்கொடி அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் ரமேஷ், சரத்குமார், தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்து, திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ரமேஷ் உட்பட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென, நீதிபதி பரூக் உத்தரவிட்டார்.

