/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்ட நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., விவாதம்
/
திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்ட நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., விவாதம்
திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்ட நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., விவாதம்
திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்ட நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., விவாதம்
ADDED : செப் 11, 2024 08:51 PM
திண்டிவனம்,:திண்டிவனத்தில் திறக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக தி.மு.க., - அ.தி.மு.க., இடையே வாக்குவாதத்தால் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர மன்றத்தின் இயல்பு கூட்டம் நேற்று நடந்தது. நகர மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
கமிஷனர் பழனி (பொறுப்பு), நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தி.மு.க.,வை சேர்ந்த 17வது வார்டு கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன், தி.மு.க., பவள விழா கொண்டாடும் நேரத்தில், திண்டிவனத்தில் திறக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை மனுவை நகர மன்ற தலைவரிடம் கொடுத்தார்.
இதற்கிடையே, நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதத்தை மேற்கோள் காட்டி, புதிதாக திறக்கப்படும் பஸ் நிலையத்திற்கு, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகர மன்ற தலைவரின் இருக்கைக்கு எதிரே நின்று, கருணாநிதி பெயரை சூட்டும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
அதையடுத்து, 'புதிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும். இத்தீர்மானம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது' என நகரமன்ற தலைவர் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பெயரை சூட்ட வேண்டும் என தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
இறுதியாக, ஆளுங்கட்சி கொண்டு வந்த தீர்மானத்திற்கு மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 25 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

