/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய நிலங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகள்; வனத்துறை நடவடிக்கை அவசியம்
/
விவசாய நிலங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகள்; வனத்துறை நடவடிக்கை அவசியம்
விவசாய நிலங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகள்; வனத்துறை நடவடிக்கை அவசியம்
விவசாய நிலங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகள்; வனத்துறை நடவடிக்கை அவசியம்
UPDATED : செப் 13, 2025 07:11 AM
ADDED : செப் 12, 2025 10:55 PM

திருப்பூர்: 'காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,' என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள், குற்றம்சாட்டினர்.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்று, மனு அளித்தனர்; கலெக்டர் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் முன்னிலையில், பிரச்னைகளை சுட்டிக்காட்டி பேசினர். விவசாயிகளின் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளித்தனர்.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து:
தாராபுரத்தில், அமராவதி ராஜவாய்க்கால், நஞ்சியாம்பாளையம் வரையிலான 8 கி.மீ., துாரத்துக்கு, நகரத்துக்குள் பயணிக்கிறது. தாராபுரம் நகர கழிவுகள், அரசு மருத்துவமனையிலிருந்து மருந்து கழிவுகள், மது பாட்டில்கள், இறைச்சி கழிவுகளை வாய்க்காலுக்குள் கொட்டப்படுகின்றன. ராஜவாய்க்காலை துார்வார அரசு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதியில், சரிவர துார்வாரப்படவில்லை. ஆகாயத்தாமரைகள் கூட அகற்றப்படவில்லை விவசாயிகளாகிய நாங்களே சொந்த செலவில், துார்வாரும் பணிகளை மேற்கொண்டுவருகிறோம்.
தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பழனிசாமி:
அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதி முழுவதும் மண் வாய்க்காலாக உள்ளது. வாய்க்காலை துார்வார அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை; இதனால், கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பாசன சங்கங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்; அந்நிதியை பயன்படுத்தி, வாய்க்காலை துார்வாரிவந்தோம். தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்றால், அந்த சங்கமே தேவையில்லையே!
அலங்கியம் ஆயக்கட்டு பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக, வயல்களிலிருந்து லாரிலாரியாக மண் வெட்டி எடுக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுவருகிறது.
காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் பாதிக்கப்படுவது குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்தும், வனத்துறை அதிகாரிகள் இதுவரை அந்தபக்கம் எட்டிப்பார்க்கவில்லை. சோளம் அறுவடை முடிந்துள்ளநிலையில், காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால், ஒவ்வொரு விவசாயிகளும் பெரும் உற்பத்தி இழப்பை சந்தித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட குழு தலைவர் சவுந்தரராஜன்:
ஊத்துக்குளி தாலுகா, செங்கப்பள்ளி ஊராட்சி, பள்ளபாளையம் குளத்துக்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுவருகிறது. இதனால், பள்ளபாளையம் குளம் வழியாக செல்லும் தார்சாலை தண்ணீரில் மூழ்கும் நிலையில் உள்ளது. போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், தார்சாலையை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு, விவசாய அமைப்பினர் பிரச்னைகளை குறிப்பிடும், கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர்.