/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைந்து விரயமாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து விரயமாகும் குடிநீர்
ADDED : செப் 18, 2025 11:39 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4வது குடிநீர் திட்டத்தில், அனைத்து பகுதியிலும் குழாய்கள் பதித்து குடிநீர் கொண்டு சென்று வினியோகிக்கப்படுகிறது.
அவ்வகையில் முக்கிய ரோடுகள் வழியாக பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பகுதிவாரியாக கட்டப்பட்டுள்ள மேல் நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் 24 மணி நேரமும் கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது.
அந்த தொட்டிகளிலிருந்து வினியோக குழாய்கள் மூலம் பகுதிவாரியாக குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள குழாய் இணைப்புகள் வாயிலாக குடிநீர் சப்ளை செய்யப் படுகிறது.
இந்த திட்டத்தில் காங்கயம் ரோட்டில் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதில் சங்கிலிபள்ளம் ஓடையின் குறுக்கில் அமைந்துள்ள ரோட்டில் கீழ் பகுதியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு குடிநீர் ஓடையில், செல்லும் கழிவு நீரில் கலந்து, வீணாகிறது. அதே போல், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே, ரோட்டோரம் பதித்துள்ள குழாயிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சேதமடைந்த குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் பாய்ந்து அருகேயுள்ள கழிவு நீர் கால்வாய்க்குச் செல்கிறது.
இந்த குழாய் உடைப்புகள் காரணமாக குடிநீர் வீணாகிறது. மேலும், ரோட்டில் பாயும் குடிநீர் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதும், ரோடு சேதமடைவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.