/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம் பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க பரமபத வாசல் திறப்பு
/
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம் பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க பரமபத வாசல் திறப்பு
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம் பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க பரமபத வாசல் திறப்பு
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம் பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க பரமபத வாசல் திறப்பு
ADDED : டிச 31, 2025 07:46 AM

உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலுள்ள பெருமாள் கோவில்களில், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க, நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 20ம் தேதி துவங்கி, பகல் பத்து உற்சவ விழாக்கள் நடந்து வந்தன.
தினமும், எம்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், திருப்பல்லாண்டு, திருப்பாவை, திருமொழி பாசுரங்கள் சேவை மற்றும் சிறப்பு அலங்காரம், தினமும் ஒவ்வொரு அவதாரங்களில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை, பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது.
நேற்று அதிகாலை, பெருமாள் கோவில்களில், மூலவருக்கு , பால், தயிர், தேன், பழச்சாறு, நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
* பெரியகடை வீதியிலுள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கருட வாகனத்தில் எம்பெருமாள் சொர்க்க வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* நெல்லுக்கடை வீதி சவுந்தரராஜ பெருமாள் கோவில், உடுமலை திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவில், சீனிவாசன ஆஞ்சநேய பெருமாள் கோவில், அலமேலுமங்கா சீனிவாச பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளினர்.
* பிரசன்ன விநாயகர் கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் சவுரிராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கரட்டு மடம் சஞ்சீவி வீரராயபெருமாள் கோவில்களில், கொழுமம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், அடிவள்ளி வெங்கடேச பெருமாள் கோவில், கொங்கல் நகரம் கரிவரதராஜ பெருமாள் கோவில் என, உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, எம்பெருமாள் திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை பரமபத வாசலில் எழுந்தருளிய நம்பெருமாளை வணங்கினர். வைகுண்ட ஏகாதசி விழா, இராப்பத்து உற்சவ நிகழ்ச்சிகள் நேற்று துவங்கி, வரும், 9ம் தேதி வரை நடக்கிறது.
பொள்ளாச்சி * பொள்ளாச்சி, கடை வீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகளால், காய்கறி, கனி, பல்வேறு திரவியங்கள், பொருட்கள் அடங்கிய சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, 'கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க பெருமாளை தரிசித்து வழிபட்டனர். தொடர்ந்து சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
* ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலையில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
*டி.கோட்டாம்பட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 29ம் தேதியன்று, 27 வகையான திவ்ய திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. நேற்று காலையில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் சுவாமியை வழிபட்டனர்.
* ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம், திருமஞ்சன சேவை, அலங்கார சேவை, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று, அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடந்தது.
இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை தரிசனம் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
* நெகமம், காட்டம்பட்டிபுதுார் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடந்தது.
* டி.கோட்டாம்பட்டி, கோதண்ட ராமர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று, சீதா தேவியுடன் ராமச்சந்திர மூர்த்தி பலவித கனி வகைகள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வால்பாறை வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜிகோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி,நேற்று முன் தினம் மூலவர் முத்தங்கி சேவை நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி பாலாஜி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வைகுண்டஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான, நேற்று காலை, 5:30மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை, 4:00 மணிக்கு மூலவர் பாலாஜிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத, பாலாஜி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-- நிருபர் குழு -:
அதனை தொடர்ந்து மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவைபாராயணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பாலாஜி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

