/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீராத பிரச்னைகள்... தீர்வுக்காக குவிந்த மனுக்கள்
/
தீராத பிரச்னைகள்... தீர்வுக்காக குவிந்த மனுக்கள்
ADDED : பிப் 20, 2024 05:24 AM

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்களுக்கு பாதிக்குப்பாதியளவு கூட குறைந்தபட்ச கூலி கொடுப்பதில்லை என்று கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமைவகித்தார். அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்டன.
போராட்ட எச்சரிக்கை
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், செக்யூரிட்டிகள் அளித்த மனு:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர், செக்யூரிட்டிகள் பணிபுரிகிறோம். ஒப்பந்த நிறுவனம், கலெக்டர் அறிவித்த தினக்கூலியை வழங்காமல், 330 ரூபாய் மட்டுமே வழங்கிவருகிறது. எங்கள் தினக்கூலியில் இ.எஸ்.ஐ., - பி.எப்., எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்கிற விவரங்களையும் தெரிவிப்பது இல்லை. துாய்மைபணியாளர்கள், செக்யூரிட்டிகளுக்கு, குறைந்தபட்ச தினக்கூலி 725 ரூபாய் வழங்கவேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் 26 ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இலவச பட்டா தாங்க...
இடுவாயை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 12 பேர், சக்கரநாற்காலியில் வந்து, மாற்றுத்திறனாளியான தங்களுக்கு, சொந்த நிலம் உட்பட வேறு சொத்து இல்லாத தங்களுக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என்று மனு அளித்தனர்.
திடீர் தர்ணா :
திருப்பூர் - மங்கலம் ரோடு, மாகாளியம்மன் கோவில் அருகே, ஈகிள் சக்தி என்கிற பெயரில் சீட்டு நடத்தி மோசடி செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றபோது, ஏராளமானோர் திரண்டுவந்து, திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்; தாங்கள் இழந்த சீட்டு தொகையை மீட்டுத்தரக்கோரியும், மோசடி செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து, தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.

