/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படித்தனர் 'பட்டம்' இதழ்; மாணவர் எதிலும் 'முதல்'
/
படித்தனர் 'பட்டம்' இதழ்; மாணவர் எதிலும் 'முதல்'
ADDED : டிச 15, 2025 05:14 AM

திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ்; எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், கருமா பாளையம் சாந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தேர்வாயினர்.
பாடம் சார்ந்த கேள்விகள் தாண்டி, அறிவாற்றல், படைப்பாற்றல், சிந்தனையாற்றலை வளர்க்கும் விதமாக 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழின் 'வினாடி - வினா' போட்டி நடத்தப் படுகிறது. ''கல்வியில் நவீன தொழில்நுட்பம் வந்தாலும், 'பட்டம்' இதழ் வாசித்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதால் பெறும் அறிவு மனதில் நிலைத்து நிற்கிறது'' என்கின்றனர் மாணவர்கள்.
பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்று, அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, கிப்ட் ஸ்பான்சர்களான, சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
அவிநாசி, சேவூர் ரோடு கருமாபாளையம், சாந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில் 47 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மதிப்பெண் அடிப்படையில் முதல் 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர்.
பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் 'எச்' அணி வெற்றி பெற்றது. இந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எழில் ஓவியன், சுகிசிவம் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று சிறப்பு பரிசை வென்றனர். இருவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ரேணுகாதேவி மோகன்குமார் பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

