/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பில்லாத தடுப்பணைகளில் மழை நீரை... சேகரிக்க வழியில்லை!வறட்சி நீங்க மழை பெய்தாலும் பலனில்லை
/
பராமரிப்பில்லாத தடுப்பணைகளில் மழை நீரை... சேகரிக்க வழியில்லை!வறட்சி நீங்க மழை பெய்தாலும் பலனில்லை
பராமரிப்பில்லாத தடுப்பணைகளில் மழை நீரை... சேகரிக்க வழியில்லை!வறட்சி நீங்க மழை பெய்தாலும் பலனில்லை
பராமரிப்பில்லாத தடுப்பணைகளில் மழை நீரை... சேகரிக்க வழியில்லை!வறட்சி நீங்க மழை பெய்தாலும் பலனில்லை
ADDED : மே 21, 2024 11:39 PM

உடுமலை: மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டம் உயர உதவும் தடுப்பணைகள் முறையாக பராமரிக்கப்படாமல், நீர் தேங்கும் பகுதிகள் மண் மேடாக மாறியுள்ளதால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கோடை கால சீசனில், கிடைக்கும் மழை நீர் முற்றிலுமாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பல ஆயிரம் ஏக்கரில், கிணறு மற்றும் 'போர்வெல்' அமைத்து, நீண்ட கால பயிரான தென்னை மற்றும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இரு வட்டாரங்களிலும், கோடை கால சீசனில், கணிசமாக பெய்யும் மழை நிலத்தடி நீர் மட்டம் உயர உதவியாக உள்ளது. கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டது; போர்வெல், கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு, ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும் கருகின.
இதனால், கோடை மழையை அனைத்துப்பகுதி விவசாயிகளும் எதிர்பார்த்து இருந்தனர். அதற்கேற்ப, பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
ஆனால், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உதவும், மழை நீர் ஓடை, தடுப்பணைகள் துார்வாரப்படாமல், மழை நீரை சேகரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
குடிமங்கலம் வட்டாரத்தில், மழை நீரை சேகரிக்கும் வகையில் உப்பாறு மற்றும் மழை நீர் ஓடைகளின் குறுக்கே, 70க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் குடிமங்கலம் வட்டாரத்தில் கட்டப்பட்டுள்ளன.
ஆனால், இந்த தடுப்பணைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை; ஓடைக்கான நீர் வழிப்பாதை மற்றும் நீர் தேங்கும் பகுதி துார்வாரப்படுவதில்லை.
மழை பெய்யும் காலத்துக்கான இடைவெளியில், அப்பகுதி முழுவதும் மண் சரிந்து, மண் மேடாக மாறி விடுகிறது.
நீர்வரத்து இருந்தாலும், தடுப்பணை நீர் தேக்க பகுதி, மேடாக இருப்பதால், எளிதாக தடுப்பு சுவரை தாண்டி, மழை நீர் வழிந்தோடி விடுகிறது.இதனால், தண்ணீர் தேங்காமல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் வாய்ப்பு இருப்பதில்லை.
கடந்த ஒரு வாரமாக குடிமங்கலம் வட்டாரத்தில், பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த, 18ம் தேதி, பெதப்பம்பட்டியில், அதிகபட்சமாக 114 மி.மீ., மழையளவு பதிவானது.
அனைத்து மழை நீர் ஓடைகளிலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால், உப்பாறு ஓடையின் குறுக்கே, தாராபுரம் ரோட்டில் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட தடுப்பணையில், தண்ணீர் தேங்கவில்லை.
துார்வாரப்படாததால், தடுப்பணையின் உட்பகுதியை விட, வெளிப்புறத்தில், அதிக தண்ணீர் தேங்கியுள்ளது. இதே நிலை பல தடுப்பணைகளில் காணப்படுகிறது.
இதே போல், உடுமலை வட்டாரத்தில், சாளையூர், புங்கமுத்துார், ஆண்டியூர், தேவனுார்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஓடைகளும், தடுப்பணைகளும் புதர் மண்டி, துார்வாரப்படாமல் பரிதாப நிலையில் உள்ளது.
வாட்டி வந்த வறட்சிக்கு விடைகொடுக்கும் வகையில், கோடை மழை பெய்தாலும், அதை பயன்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இதனால், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். விரைவில், தென்மேற்கு பருவமழை சீசன் துவங்க உள்ள நிலையில், தண்ணீர் தேங்காத தடுப்பணைகளில், அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

