/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளை பொருளுக்கு உரிய விலை இல்லை; பலன்தராத ஒருங்கிணைந்த வேளாண் திட்டம்
/
விளை பொருளுக்கு உரிய விலை இல்லை; பலன்தராத ஒருங்கிணைந்த வேளாண் திட்டம்
விளை பொருளுக்கு உரிய விலை இல்லை; பலன்தராத ஒருங்கிணைந்த வேளாண் திட்டம்
விளை பொருளுக்கு உரிய விலை இல்லை; பலன்தராத ஒருங்கிணைந்த வேளாண் திட்டம்
ADDED : செப் 16, 2025 11:25 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, குவிண்டால் நேந்திரன் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து, கிலோ, 21 முதல், 22 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகள் சிலர் கூறியதாவது:
ஒரு ஏக்கருக்கு சராசரியாக, 750 வாழைக்கன்று நடவு செய்யப்படுகிறது. சராசரியாக ஒரு வாழைத்தார், 20 கிலோ எடை கொண்டதாக இருக்கும்; அதன்படி, ஒரு ஏக்கருக்கு, 15 ஆயிரம் கிலோ வாழை மகசூலாக பெற முடியும். நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோ, 21 முதல் 22 ரூபாய் என்ற நிலையில், 3.30 லட்சம் ரூபாய் விற்பனைத் தொகையாக கிடைக்கும்.
வாழைக்கன்று நடவு செய்வதில் துவங்கி, அறுவடை முடித்து, வாழையை ரோட்டோவேட்டர் வாயிலாக ஓட்டி முடிக்கும் வரை, ஏக்கருக்கு, 2,50 லட்சம் ரூபாய் செலவாகும். அதன்படி, வாழை சாகுபடியால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம், மிகக்குறைவு தான்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பலன்தராத அரசு திட்டம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை செயல்பாடுகளை மேம்படுத்த, அனைத்து கிராம ஒருங்கிைணந்த வேளாண் திட்டம் மற்றும் வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதன் படி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில், புதிதாக வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்குவது, 'நானோ' தொழில்நுட்ப உரம் பயன்படுத்துவது, 'ட்ரோன்' வாயிலாக உரமிடுவது உட்பட பல விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு வட்டார அளவில், எந்தெந்த பருவத்தில் எந்தெந்த விளைப் பொருட்களை சாகுபடி செய்வது, சந்தை வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்ற ஆலோசனையை அவர்கள் வழங்குவர்.
வேளாண் விற்பனை வணிகத்துறையினரையும் இணைத்து அவர்கள் செயல்பட வேண்டும் என்ற நிலையில், விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்பையும் வகுத்து கொடுக்க வேண்டும்.
ஆனால், 'வேளாண் விஞ்ஞானிகள், தங்கள் துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதோடு, தங்களது பணியை முடித்துக் கொள்கின்றனர். சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பணிகளில், வேளாண் விற்பனை வணிகத்துறையினர் ஆர்வம் காட்டுவதில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இடைத்தரகர் ஆதிக்கம்
'விவசாயிகளின் தோட்டங்களில் இருந்து புரோக்கர்கள் தான், வாழையை கொள்முதல் செய்து, கமிஷன் வைத்து வியாபாரிகளுக்கு வழங்குகின்றனர். விலை இறங்கும் சமயத்தில், புரோக்கர்கள், வாழையை கொள்முதல் செய்ய முன்வருவதில்லை; சந்தையில் விலையேற்றம் தென்படும் சமயத்தில் கூட, விவசாயிகளால் விலையேற்றத்தை உணர்ந்து கொள்ள முடியாத அளவு, இடைத்தரகர்கள் செயல்படுகின்றனர். விலையேற்றத்தின் பலனை கூட இடைத்தரகர்களே அனுபவிக்கின்றனர்,' என்பதும் விவசாயிகளின் ஆதங்கம்.