/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எங்கெங்கும் வேரூன்றும் தமிழ் மொழி!
/
எங்கெங்கும் வேரூன்றும் தமிழ் மொழி!
ADDED : பிப் 20, 2024 11:52 PM
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்' என்றார், முண்டாசுக்கவி பாரதி.
'தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு' என, தமிழரை அடையாளப்படுத்தினார் நாமக்கல் கவிஞர்.
உலக தாய்மொழி தினமான இன்று, தமிழின் பெருமைகளை அறிந்துக் கொள்ள வேண்டிய, உணர்ந்துக் கொள்ள வேண்டிய அவசியம், இக்கால தலைமுறையினருக்கு ஏற்பட்டிருக்கிறது.
தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள் நினைவாக, அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் வகையில், பிப்., 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக 'யுனெஸ்கோ'அறிவித்தது. கடந்த, 2,000ம் முதல், இது பின்பற்றப்படுகிறது.
'ஆப்ரிக்க நாடான கானாவில் நடைபெற்ற ஒரு ஆய்வில், பிறமொழிக் கல்வி கற்றவர்களைவிட, தாய்மொழிக்கல்வி கற்றவர்களுக்கு, 40 சதவீதம் எழுத்தறிவுத்திறன் அதிகமாக இருக்கிறது' என்பது உறுதியாகியிருக்கிறது.
பனியன் தொழில் நிறைந்த திருப்பூரில், கிட்டதட்ட, ஒரு லட்சம் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் என்ற நிலை உருவாகிஇருக்கிறது.
திருப்பூர் தமிழ்ச்சங்க பொருளாளர், திருப்பூர் ஒசைரி யார்ன் வர்த்தகர்கள் சங்க தலைவருமான முருகேசன் கூறியதாவது:
கர்நாடகா, ஆந்திரா, பீகார், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா என பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திருப்பூரில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். அவர்களுக்கு முன்னதாக, கேரளாவை பூர்வீகமாக கொண்ட மலையாள இன மக்கள் திருப்பூரில் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்கள் மிக விரைவில் தமிழ் கற்றுக் கொள்கின்றனர். இலக்கண, இலக்கிய புலமை பெறும் அளவுக்கு கூட, தங்களின் தமிழ் ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர். இதன் வாயிலாக, தமிழ் மொழி, பல்வேறு மாநிலங்களுக்கும் பரவுகிறது; வளர்கிறது; வேரூன்றுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
- இன்று, சர்வதேச தாய்மொழி தினம்.

