/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொட்டும் பனி... வேண்டாம் பிணி
/
கொட்டும் பனி... வேண்டாம் பிணி
ADDED : டிச 27, 2025 06:29 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது; பனி கொட்டுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் குளிரின் தாக்கம் அதிகமாகி வருவதால், இணைநோய் உள்ளவர்கள், முதியோர், குழந்தைகள், தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வோர் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
வெந்நீர் பருகுங்கள்
திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ உதவி அலுவலர் அனுலேகா கூறியதாவது:இரவு, அதிகாலை நேரத்தில் வெளியே செல்வோர் நேரடியாக பனி தாக்காமல் இருக்க, ஸ்வெட்டர், குல்லா அணிந்தபடி செல்ல வேண்டும். அதிகாலையில் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளலாம். சுவாச பிரச்னை வராமல் இருக்க, வெந்நீரில் மஞ்சள் துாள் போட்டு ஆவி பிடிக்கலாம்; வெந்நீரையே பருகலாம்.குளிர்பானம், ஐஸ்கிரீம், குளிர்ந்த பதார்த்தங்களை அதிகளவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேர்க்கடலை, பாதாம் சாப்பிடலாம். பிரிட்ஜ்ஜில் வைத்த உணவு வேண்டாம். காய்ச்சல், சளி இருப்பவர்கள், கபசுர குடிநீர், தாளிசார சூரணம், திரிகடக சூரணம் அருந்தலாம்.
சூடாக உண்ணுங்கள்
ஜீரண சக்தி சீராக இருக்கும் வகையிலான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குளிர்ந்த உணவை சாப்பிட்டால், ஜீரண சக்தி பலவீனமடையும். முடிந்த வரை சூடான, புதியதாக சமைத்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும். உடலை கதகதப்புடன் வைக்க, சூடான சூப் பருகலாம்.
கொழுப்பு தவிர்க்கலாம்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மஞ்சள் கலந்த பால், சிறுதானியங்கள், இஞ்சி, பூண்டு, காய்கறிகள், உடலை சூடாக்கும் பழங்கள், நெய் மற்றும் கீரை, நார்ச்சத்துடைய பழங்களை சாப்பிடுவது அவசியம். கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
இவ்வாறு, அனுலேகா கூறினார்.
---
தீ மூட்டி குளிர் காய்கிறார் ஒருவர்.
இடம்: அவிநாசி, நம்பியாம்பாளையம்.

