/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரசார களத்தில் திணறும் அரசியல்வாதிகள்... வெயிலு தாங்க முடியலீங்க!
/
பிரசார களத்தில் திணறும் அரசியல்வாதிகள்... வெயிலு தாங்க முடியலீங்க!
பிரசார களத்தில் திணறும் அரசியல்வாதிகள்... வெயிலு தாங்க முடியலீங்க!
பிரசார களத்தில் திணறும் அரசியல்வாதிகள்... வெயிலு தாங்க முடியலீங்க!
UPDATED : ஏப் 08, 2024 06:44 AM
ADDED : ஏப் 07, 2024 09:10 PM

உடுமலை;வெப்பத்தின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சி தொகுதியில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் திணறி வருகின்றனர்; வேட்பாளர்களும், பிரசார களத்தில், மாற்றங்களை செய்து, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 15 லட்சத்து 81 ஆயிரத்து 795 வாக்காளர்கள் உள்ளனர். நகரப்பகுதியில், 821; கிராமத்தில் 880 என மொத்தம், 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும், பிரசாரம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதற்கட்டமாக பிரதான கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். தேர்தல் கமிஷனின் தீவிர கண்காணிப்பால், இத்தகைய கூட்டங்களை நடத்தவே வேட்பாளர்கள் திணற வேண்டியிருந்தது.
மாற்றம் தந்த வெப்பம்
பசுமையும், காற்றோட்டமும் மிகுந்த பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை தொகுதியிலும் இந்தாண்டு, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த கோடை வெயில், கட்சியினருக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
வேட்பாளர்கள், ஆறு சட்டசபை தொகுதிகளை சுற்ற வேண்டியுள்ள நிலையில், பகலில் பிரசாரம் சிக்கலாகியுள்ளது. கூட்டத்தை பொறுத்து, குறுகிய நேரத்தில், அனைவரும் பேசி முடித்து விட்டு 'எஸ்கேப்' ஆகின்றனர்.
மதிய நேரத்தில், நிர்வாகிகளுடன் ஆலோசனை என நிழலை விட்டு வெளியேற முடியாத நிலை காணப்படுகிறது. வேட்பாளர்களே வெயிலுக்கு பதுங்குவதால், கிளை, ஒன்றிய நிர்வாகிகளும், கிராமங்களில் நேரடி பிரசாரத்துக்கு தயக்கம் காட்டுகின்றனர்.
காலை, 10:00 மணிக்கு முன்னதாக, தங்கள் கட்சி சின்னங்கள் அச்சிட்ட, நோட்டீஸ்களை குறிப்பிட்ட பகுதியில் வினியோகித்து விட்டு, தேர்தல் அலுவலகங்களில் தஞ்சமடைகின்றனர்.
இரவு நேரங்களில், பிரசாரத்துக்கு சென்றால், மக்களிடம் எதிர்பார்ப்புகள் வேறுமாதிரியாக இருப்பதால், கட்சி நிர்வாகிகள் திண்ணை பிரசார ஸ்டைலுக்கு திண்டாட வேண்டியுள்ளது.
அதிகம்... அதிகம்...
உடுமலை பகுதியில், கடந்த சில நாட்களாக, அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகிறது. நெடுஞ்சாலைகளில், வெப்பக்காற்று வீசுவதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
இதனால், வேட்பாளர்களுடன் உற்சாகமாக இருசக்கர வாகனத்தில் வலம் வரும் தொண்டர்களும், நிர்வாகிகளும் வெயிலுக்கு பயந்து, சரக்கு வாகன பயணத்துக்கு தாவியுள்ளனர்.
கட்சிக்கொடி கட்டியபடி, இருசக்கர வாகனத்தில் வேட்பாளருக்கு முன்னதாக, கிராமங்களில், அலப்பறை காட்டும் கூட்டம், வெயிலால் காணாமல் போயுள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், பகலில், பிரசார நேரத்தை குறைத்து விட்டு, இரவு நேரங்களில், அனைத்து கட்சியினரும் கிராமங்களில், பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதையொட்டி, பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்களும் அரங்கேற வாய்ப்புள்ளது. எனவே, நகரை விட, கிராமப்புறங்களில், இரவு நேர கண்காணிப்பை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரப்படுத்தினால், மட்டுமே பண வினியோகம் உள்ளிட்ட விதிமீறல்களை முழுமையாக தடுக்க முடியும்.
மேலும், மதுபாட்டில்களை கிராமம்தோறும் இருப்பு வைத்து பிரசாரம் முடிந்ததும், வினியோகிக்கின்றனர். இதற்காக விதிகளை மீறி, பல இடங்களில், மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கிராம வாரியாக ரோந்து செல்வது அவசியமாகியுள்ளது.

