/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொஞ்சநஞ்சமல்ல! குறைகேட்பு கூட்டத்தில் குறைகள் ; கொட்டித் தீர்த்த பொதுமக்கள்
/
கொஞ்சநஞ்சமல்ல! குறைகேட்பு கூட்டத்தில் குறைகள் ; கொட்டித் தீர்த்த பொதுமக்கள்
கொஞ்சநஞ்சமல்ல! குறைகேட்பு கூட்டத்தில் குறைகள் ; கொட்டித் தீர்த்த பொதுமக்கள்
கொஞ்சநஞ்சமல்ல! குறைகேட்பு கூட்டத்தில் குறைகள் ; கொட்டித் தீர்த்த பொதுமக்கள்
ADDED : மார் 12, 2024 01:32 AM

திருப்பூர்;வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு; மரங்களை வீழ்த்திவிட்டு குடிநீர் தொட்டி கட்டக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். நீண்டநாட்களாக தீர்க்கப்படாத தங்கள் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
கொடிகாத்த குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்:
அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம், கொடிகாத்த குமரன் நகரில், பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, 25 அடி உயரம் வரை அடர்வனமாக வளர்ந்துள்ளன. சங்க உறுப்பினர்களின் நிதி பங்களிப்பு மூலம் பூங்கா பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், பூங்கா அமைந்துள்ள இடத்தில், மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும். ஏற்கனவே, அதேயிடத்தில், 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டி ஒன்றும், ஒரு லட்சம் லிட்டர் தரைமட்ட தொட்டி ஒன்றும் உள்ளன. எனவே, பூங்கா பகுதியில், புதிய மேல்நிலை தொட்டி உள்பட எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது.
இடுவம்பாளையம் பகுதி மக்கள்:
மக்களிடம் கருத்து கேட்காமலேயே, இடுவம்பாளையம் தெற்கு விநாயகபுரம் பகுதியில், மருத்துவமனை அமைக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. குடியிருப்பு நிறைந்த குறுகலான இடத்தில் மருத்துவமனை கட்டப்பட்டால், மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும். இப்பகுதியில் அங்கன்வாடி மையம், ரேஷன்கடை, விநாயகர் கோவில் ஆகியவை உள்ளன. மருத்துவமனை அமையும்போது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். எனவே, மாற்று இடம் தேர்வு செய்து மருத்துவமனை கட்டவேண்டும் என, அம்மனுவில் கூறியுள்ளனர்.
வள்ளிபுரம் ஊராட்சிமக்கள்:
திருப்பூர் ஒன்றியம் வள்ளிபுரம் ஊராட்சி, பசுமை நகர் - 1ல், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மத்திய நிதிக்குழு மானியத்தில், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. அந்த இணைப்புகளுக்காக, 10 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு ஊராட்சி தலைவர் நிர்பந்திக்கிறார். தொகை செலுத்தாததால், 58 வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே, ஒன்பது வீடுகளுக்கான இணைப்பை துண்டித்துவிட்டனர். இலவச குடிநீர் இணைப்பு வழங்கி, எங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும், என்றனர்.
இதுகுறித்து வள்ளிபுரம் ஊராட்சி தலைவர் முருகேசன் கூறுகையில், ''மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்குநாமே திட்டத்தில், 30 ஆயிரம் லிட்டர் தொட்டி கட்டப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்பு தொகையை பெறுவதில்லை; கலெக்டர் பெயருக்கு காசோலையாகவே பெறப்படுகிறது. 53 பேர் மட்டும் இன்னும் பங்களிப்பு தொகை செலுத்தவில்லை. தொகை செலுத்தாதோரின் வீட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டாலும்கூட, அவர்கள், பொதுக்குழாயில் குடிநீர் பெறலாம்.
பட்டுக்கோட்டையார் நகர் மக்கள்:
பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் குடியிருக்கும் 196 குடும்பங்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க கோரி 33 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். 1999ல், முதல்கட்டமாக 72 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தனியார் வழக்கு தொடர்ந்ததால், பட்டா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வழக்கு முடிவுக்கு வந்ததால், பட்டா கேட்டு தொடர்ந்து போராடுகிறோம்.
கடந்த பிப்., 5ம் தேதி, கலெக்டர் ஆபீசில் போராட்டம் நடத்தியபோது, 3 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு பட்டா வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

