/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒட்டுக்குளத்துக்கான மேம்பாட்டு பணிகளை... செயல்படுத்துங்க! வடிகால் அமைப்பதும் இழுபறியால் அதிருப்தி
/
ஒட்டுக்குளத்துக்கான மேம்பாட்டு பணிகளை... செயல்படுத்துங்க! வடிகால் அமைப்பதும் இழுபறியால் அதிருப்தி
ஒட்டுக்குளத்துக்கான மேம்பாட்டு பணிகளை... செயல்படுத்துங்க! வடிகால் அமைப்பதும் இழுபறியால் அதிருப்தி
ஒட்டுக்குளத்துக்கான மேம்பாட்டு பணிகளை... செயல்படுத்துங்க! வடிகால் அமைப்பதும் இழுபறியால் அதிருப்தி
ADDED : நவ 28, 2025 04:57 AM

உடுமலை: நகரின் அருகே முக்கிய பாசன நீராதாரமான ஒட்டுக்குளத்தை பாதுகாக்க சிறப்புத்திட்டங்களையும், இழுபறியாக உள்ள வடிகால் அமைப்பு மேம்பாட்டுப்பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால், அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை நகரின் அருகில், 90 ஏக்கர் பரப்பளவில், 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும்.
நேரடியாகவும், நிலத்தடி நீர் பாதுகாப்பு வாயிலாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரமாக இக்குளம் உள்ளது. பொதுப்பணித்துறையால், ஏழு குள பாசன திட்டத்தின் கீழ் இக்குளம் பராமரிக்கப்படுகிறது.
அரசாணை அடிப்படையில், திருமூர்த்தி அணையிலிருந்து ஏழு குளங்களுக்கு தண்ணீர் திறக்கும் போது இக்குளமும் பயன்பெறும்.
பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இக்குளத்தில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்படாமல் இழுபறியாக உள்ளது.
மழைக்காலங்களில், ஏழு குளங்கள் மற்றும் பல்வேறு மழை நீர் ஓடைகளின் உபரி நீர் இக்குளத்தில் இருந்து தங்கம்மாள் ஓடையில் வெளியேற்றப்படுகிறது. குளம் அருகே துவங்கும் இந்த ஓடை உடுமலை நகரம் வழியாக செல்கிறது.
எனவே, நகராட்சி நுாற்றாண்டு விழா வளர்ச்சிப்பணிகள் சிறப்புத்திட்டத்தின் கீழ், 12.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதியின் கீழ் குளத்தின் அருகே, ஓடையின் இருபுறங்களிலும், கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இதுவரை பணிகள் நிறைவு பெறாமல், இழுபறியாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் ஒட்டுக்குளம் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளது. அப்போது வடிகால் அமைப்பான தங்கம்மாள் ஓடை கரைகள், மண் கரையாக இருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே இழுபறியாக நடக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கரைகளை கவனிக்கணும்! ஒட்டுக்குளத்தின் கரையை, சுண்டக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வழித்தடமாக பயன்படுத்துகின்றனர்.
அதிகளவு வாகனங்கள் இவ்வழியாக செல்லும் நிலையில், கரையை வலுப்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரை வலுவிழந்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்குகிறது. எனவே பொதுப்பணித்துறையினர் கரையை வலுப்படுத்த, சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
கழிவுகளால் பாதிப்பு ஏழு குளங்களில் இருந்த ஒட்டுக்குளத்துக்கு தண்ணீர் வரும், வரத்து கால்வாய் முறையாக துார்வாரப்படாமல், பல்வேறு இடங்களில் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும், குளத்தின் நீர்தேங்கும் பகுதியில், பல வகையான கழிவுகளை கொட்டுகின்றனர்.
இதனால், தண்ணீரும் மாசடைகிறது. நிரந்தர தடுப்புகள் ஏற்படுத்தி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

