/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டுக்கே பெருமை சேர்க்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்
/
நாட்டுக்கே பெருமை சேர்க்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்
ADDED : செப் 12, 2025 12:28 AM

திருப்பூர்: துணை ஜனாதிபதி தேர்தலில் திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, இன்று பதவியேற்க உள்ளார். அவருடன், 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணிக்கும், திருப்பூரை சேர்ந்த அவரது நண்பர்கள், தங்களது நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
கொடுவாய், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி செயலாளர் துரைசாமி:
சி.பி.ராதாகிருஷ்ணன், எனது 50 ஆண்டுகால நண்பர்; கே.எஸ்.சி., பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் போது, மாணவர் தேர்தலில் வென்று, தலைவராக பணியாற்றினார். தனது, 17 வயதில், ஆர்.எஸ்.எஸ்.,ல் இணைந்தார்; தற்போது, 68 வயதாகிறது. 51 ஆண்டுகளாக, பாதைமாறாமல், ஹிந்துத்துவாவை பாதுகாக்க வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தேர்தல்களில், ஐந்து முறை போட்டியிட்டார்; இரண்டு முறை, எம்.பி., யாக வெற்றி பெற்றார். மூன்று முறை தோல்வியடைந்தார்; தோல்வி குறித்து கவலைப்படவில்லை.
தேசிய கயிறு வாரிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு, 200 கோடியாக இருந்த 'டர்ன் ஓவர்', சில மாதங்களில், 2,000 கோடி ரூபாயாக உயர்த்தினார். டெக்ஸ்டைல் கமிட்டி தலைவராக இருந்த போது, புதிய மெஷின் வாங்க மானியம் வழங்கும், 'டப்' திட்டம் வர காரணமாக இருந்தார். எந்தவேலை கொடுத்தாலும் முழு ஈடுபாட்டுடன் திறமையாக செய்வார்; அந்த நம்பிக்கையில்தான், துணை ஜனாதிபதி பதவியும் அவரை தேடிவந்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது.
திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா செயலாளர், 'எக்ஸலான்' ராமசாமி:
சிறிய வயதில் இருந்தே, நாங்கள் நண்பர்கள்; தேசியம், தேசப்பற்று ஆர்வம் அதிகம்; கடவுள் நம்பிக்கையும் அதிகம்; ஒவ்வொரு வேளையும், குலதெய்வத்தை வணங்காமல் சாப்பிட மாட்டார். தர்மத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். இளைஞர்களை அழைத்து, சங்கப்பலகை நடத்துவதில் ஆர்வம் அதிகம்; ஆர்.எஸ்.எஸ்., சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்; நாங்கள் ஒன்றாக பயணித்தோம். சோதனை வரும் போதெல்லாம், 'தர்மம் தலைகாக்குமுங்க அண்ணா...' என்று எளிதாக ஏற்றுக்கொள்வார்.
காமராஜர் மறைவுக்கு பிறகு, நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, சி.பி.ராதாகிருஷ்ணனுடன் பயணித்தேன். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்கு ஒரே மாதிரி மரியாதை கொடுப்பவர்; நன்றி மறக்காதவர். பனியன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது; 25 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது; இருந்தாலும், அரசியல் ஆர்வம் குறையவில்லை; மக்களை மதித்தார். கவர்னராக இருந்தாலும், எளிதாக அவருடன் போனில் பேசமுடியும்; எளிமையான நண்பர். துணை ஜனாதிபதி பதவி சரியான நபரை தேடி வந்துள்ளது; நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவார்.