ADDED : டிச 26, 2025 06:23 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு அனைத்து சர்ச்களிலும் கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில் சிறப்பு ஆராதனைகள், பாடற்பலி பூஜைகள் நடந்தன. இவற்றில் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
நேற்று சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள், கூட்டு பாடல் பலி நிகழ்ச்சிகள் நடந்தது. புத்தாடை அணிந்து வந்து கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். இவற்றில் பங்கு தந்தையர் தலைமை வகித்து நடத்தினர்.
திருப்பூர், குமரன் ரோடு புனித கத்ரீனம்மாள் சர்ச், குமார் நகர் புனித பவுல் சர்ச், பூமலுார் புனித அந்தோணியார் சர்ச், நல்லுார் சி.எஸ்.ஐ., சர்ச், கோர்ட் வீதி டி.இ.எல்.சி. சர்ச், பள்ளபாளையம் புனித ஆரோக்கிய மாதா சர்ச் உள்ளிட்ட திருப்பூர் பகுதி சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
அதே போல் பல்லடம், அவிநாசி, பெருமாநல்லுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து சர்ச்களிலும் நேற்று சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் 'சாண்டா கிளாஸ்' வேடமணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கி உற்சாகமூட்டினர். கிறிஸ்தவர்கள் பரஸ்பரம் கேக் மற்றும் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டனர்.

