/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செங்கல் சூளை தொழிலாளி மகன் மாநில பேச்சுப்போட்டியில் முதலிடம் சிங்கப்பூர் 'பறக்க' துணைபுரிந்த அர்ப்பணிப்பு
/
செங்கல் சூளை தொழிலாளி மகன் மாநில பேச்சுப்போட்டியில் முதலிடம் சிங்கப்பூர் 'பறக்க' துணைபுரிந்த அர்ப்பணிப்பு
செங்கல் சூளை தொழிலாளி மகன் மாநில பேச்சுப்போட்டியில் முதலிடம் சிங்கப்பூர் 'பறக்க' துணைபுரிந்த அர்ப்பணிப்பு
செங்கல் சூளை தொழிலாளி மகன் மாநில பேச்சுப்போட்டியில் முதலிடம் சிங்கப்பூர் 'பறக்க' துணைபுரிந்த அர்ப்பணிப்பு
ADDED : அக் 14, 2024 11:48 PM

மாநிலப் பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்று, பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேர்வாகி, கடந்த பிப்., மாதம், சிங்கப்பூர் சென்று வந்திருக்கிறார், பசுபதி.
தற்போது சென்னையில் உள்ள மாநிலத் தகைசால் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். பசுபதியின் உழைப்பும், திறமையும், முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணம். இதோ, பசுபதியே நம்மிடம் பகிர்கிறார்:
அப்பா, அம்மாவுக்கு கூலி வேலை. ஊர் ஊராக செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து படிக்க வைத்து வந்தனர். குடும்பச்சூழலால் அண்ணன் பாதியில் படிப்பை நிறுத்தி வேலைக்கு சென்று விட்டார்.
சிறுவயதில் மும்பை, பெங்களூருவில் தங்கியிருந்தோம். தாராபுரத்தில் ஒரு சூளையில் பெற்றோர் வேலைக்குச் சேர்ந்தனர். நரசிங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளியில் நடக்கும் பேச்சு போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றேன்; ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.
மாநிலப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தும், அனுப்பி வைக்க குடும்பத்தில் வசதியில்லை; போக முடியவில்லை. தாராபுரம் என்.சி.பி., அரசு உதவி பெறும் பள்ளியில், என்னை ஒன்பதாம் வகுப்பில் பெற்றோர் சிரமப்பட்டு சேர்த்தனர். பேச்சுப்போட்டியில் பங்கேற்று பேசியதைப் பார்த்து, தமிழாசிரியர் தமிழ்ச்செல்வன் மிகுந்த ஊக்கமளித்தார்.
பேச்சுப்போட்டி என்றால், மேடையேறி மைக் பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவர் அளித்த ஊக்கம் தான் என்னை அடுத்தடுத்த போட்டிகளில் பேசும் ஆர்வத்தை உண்டாக்கியது.
உடல்மொழி கற்க ஆறு மாதம்
மாவட்டப் போட்டியில் பங்கேற்கும் போது துவக்கத்தில் தடுமாற்றம், பயம் இருந்தது. கைதட்டு பெறுபவர்கள் எல்லாம் எப்படி பேசுகிறார்கள், அவர்கள் உச்சரிக்கும் வார்த்தை, உடல்மொழி எப்படி எப்படி மாறுபடுகிறது என்பதை கூர்ந்து கவனித்தேன்; பயிற்சி எடுத்தேன்.
முழுமையாக பேச்சுப்போட்டியை பற்றி தெரிந்து கொள்ளவே ஆறு மாதமானது. அடுத்த நடந்த மாவட்ட போட்டியில் வென்றதால், மாநில போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் நடந்த மாநில பேச்சு போட்டியில் முதலிடம் பெற்றதால், சிங்கப்பூர் செல்லும் குழுவில் இடம்பிடித்தேன்.
புலம்பெயர் தொழிலாளர் குடும்பம் என்பதால், பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட போதிய ஆவணம் இல்லாமல் சிரமப்பட்டேன். தலைமை ஆசிரியர் சிவனாந்தம் தக்க ஆலோசனைகளை வழங்கி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். சிங்கப்பூர் சென்று வந்த போது கனவு நிறைவேறியது போல் உணர்ந்தேன்.
மாநில பேச்சுப்போட்டியில் பெற்ற வெற்றி காரணமாக தற்போது சென்னை, சைதாப்பேட்டையில் சிறந்த மாணவர்கள் பயிலும் மாநிலத் தகைசால் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு உறுதுணையாக அமைச்சர் மகேஷ் இருந்தார். அவருக்கு நன்றி. திறமையால் சாதிப்பவர்கள் தடைக்கற்கள் எல்லாம், பனிப்போல உருகிவிடும்.

