/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சோலார் பேனல்கள் அமைகின்றன
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சோலார் பேனல்கள் அமைகின்றன
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சோலார் பேனல்கள் அமைகின்றன
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் சோலார் பேனல்கள் அமைகின்றன
ADDED : டிச 28, 2025 06:59 AM

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,916 கோடி ரூபாய் செலவில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இம்மாவட்டங்களில் உள்ள, 1,045 குளம் குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்படுகிறது. பவானி ஆற்றுநீரை மையமாக கொண்டு, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீரில், ஆண்டுக்கு, 1.5 டி.எம்.சி., 'பம்பிங்' முறையில் நீர் எடுப்பதே இத்திட்டத்தின் செயல்பாடு.இந்தாண்டு 1.5 டி.எம்.சி. நீர் எடுக்கப்பட்டுள்ளது.திட்டம் தடையின்றி தொடர, 'சோலார் பேனல்' அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
நீர் வளத்துறை செயற்பொறியாளர்(அத்திக்கடவு - அவிநாசி திட்டம்) மோகனசுந்தரம் கூறியதாவது:
திட்டத்தில், 95 சதவீத குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட்டுவிட்டது. சிறிய குளம், குட்டைகளுக்கு நீர் வினியோகம் செய்வதில் உள்ள பிரச்னைகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. நீரேற்ற பணிக்கு, ஆண்டுக்கு, 75 கோடி ரூபாய் மின் கட்டணமாக செலவாகிறது; எனவே, சோலார் பேனல் அமைத்து, அதன் வாயிலாக மின் உற்பத்தி செய்து, அத்திக்கடவு திட்ட பயன்பாடுக்கு போக, எஞ்சிய மின்சாரத்தை மின் வாரியத்துக்கு வழங்கும் வகையிலான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு, 'சோலார் பேனல்' அமைப்பதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறையினர், குழாய் பதிப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது, அத்திக்கடவு குழாய்கள் சேதமடைவதால் நீர் வினியோகத்தில் தடங்கல் ஏற்படுகிறது; அதுவும், அவ்வப்போது சரி செய்யப்படுகிறது.
---
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மூலம் நிரம்பியுள்ள, அவிநாசி, சங்கமாங்குளம்; பெருந்துறையில் உள்ள குளம்.

