/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்புக்கொடி ஏற்றி அ.தி.மு.க., போராட்டம்
/
கருப்புக்கொடி ஏற்றி அ.தி.மு.க., போராட்டம்
ADDED : டிச 16, 2024 10:44 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு, வாடகை கட்டடங்களுக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.,க்கு எதிராக திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், கடந்த, 8ம் தேதி முதல், கடைகளின் முன் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாளை கடையடைப்பு போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், நேற்று துவங்கி, நாளை வரை (18ம் தேதி) வரை, அ.தி.மு.க.,வினர் வீடுகள், தொழிற்சாலை மற்றும் கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ''தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாதவகையில் திருப்பூர் மாநகராட்சியில், சொத்துவரி, குப்பை வரி உள்ளிட்ட வரியினங்கள் அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாது, நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பனியன் தொழிலில், குறு, சிறு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. திருப்பூர் வரும் துணை முதல்வர் உதயநிதி, வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்புகளை அழைத்து பேசி, அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்,'' என்றார்.

