/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீயணைப்பு துறைக்கு கூடுதல் வசதிகள் அவசியம் இரு தாலுகாவிற்கு ஒரே நிலையத்தால் சிக்கல்
/
தீயணைப்பு துறைக்கு கூடுதல் வசதிகள் அவசியம் இரு தாலுகாவிற்கு ஒரே நிலையத்தால் சிக்கல்
தீயணைப்பு துறைக்கு கூடுதல் வசதிகள் அவசியம் இரு தாலுகாவிற்கு ஒரே நிலையத்தால் சிக்கல்
தீயணைப்பு துறைக்கு கூடுதல் வசதிகள் அவசியம் இரு தாலுகாவிற்கு ஒரே நிலையத்தால் சிக்கல்
ADDED : பிப் 20, 2024 05:14 AM

உடுமலை: உடுமலையிலுள்ள தீயணைப்பு நிலையம், 1931ல், துவக்கப்பட்ட பழமையான தீயணைப்பு நிலையமாகும். தற்போது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான அலுவலகம், பொள்ளாச்சி ரோட்டில், அமைந்துள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுகாவில், 72 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்துள்ளது.
இரு தாலுகாவிலும், நுாற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், தீவன உற்பத்தி தொழிற்சாலைகள், காற்றாலைகள் என பல்வேறு வகை தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளன.
கரும்பு, மக்காச்சோளம் என தீ விபத்தால் பாதிக்கும், விவசாய சாகுபடியும், பல ஆயிரம் ஏக்கராக இப்பகுதியில் உள்ளது.
ஒரு சில சமயங்களில், திண்டுக்கல், கோவை என இரு மாவட்ட எல்லை வரை, உடுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயணைப்பு பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
உடுமலையில், தற்போது, ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது. தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துக்களை அணைப்பது மட்டுமின்றி, தற்போது, பல்வேறு வகையான மீட்பு பணிகளுக்கும் தீயணைப்பு நிலைய வீரர்களின் தேவை அதிகரித்துள்ளது.
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ள திருமூர்த்தி, அமராவதி அணைகளில் மூழ்குபவர்களை காப்பாற்றுவது, உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பது மற்றும் பிரதான ரோடுகளில் ஏற்படும் வாகன விபத்துக்களில் சிக்குபவர்களை காப்பாற்றுவது என அனைத்து பணிகளிலும், இவ்வீரர்களே ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கிணறு உட்பட நீர்நிலைகளில், தவறி விழும் கால்நடைகளை மீட்பது, குளம், குட்டைகளில் விழுந்தவர்களை மீட்பது, வீடுகளுக்குள் புகுந்த பாம்புகளை பிடிப்பது என, தீயணைப்புத்துறைக்கு வரும் அழைப்புகள் அதிகரித்துள்ளது.
இவ்வாறு, இப்பணிகளுக்காக இங்கு இருக்கும் ஒரே வாகனத்தை எடுத்துச்செல்வதால், அச்சமயத்தில், வரும் தீ விபத்துகளுக்கு, குறைந்த நேரத்தில், சென்று, தீயணைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
உடுமலை நிலையத்திற்கு, ஆண்டுக்கு, 233 வரை, தீ விபத்து குறித்த அழைப்புகளும், 405 வரை, மீட்பு பணிகளுக்கான அழைப்புகளும் வருகின்றன.
ஒரு சில நாட்களில், ஒரே சமயத்தில் பல அழைப்புகள் வரும் போது, பெரும் சிக்கல் ஏற்படுவதோடு, தீயணைப்பு வீரர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால், தீ விபத்துக்கள் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் அதற்கான வீரர்கள் ஒதுக்கீடு, குறுகிய பகுதிகளுக்குள் செல்ல ஏதுவாக சிறிய அளவிலான தீயணைப்பு வாகனம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பெரிய அளவிலான தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதியாக உள்ளதால், பஞ்சு, மஞ்சி உள்ளிட்டவற்றை அணைக்க பல மணி நேரம் தேவைப்படும் போது, நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
எனவே, கூடுதலாக ஒரு தண்ணீர் டேங்கர் லாரி வழங்க வேண்டும், என உடுமலை, மடத்துக்குளம் பகுதி மக்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் சார்பில், நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு கூடுதல் வாகனங்கள், வீரர்கள் உட்பட கூடுதல் வசதிகள் செய்யவும், மடத்துக்குளம் தாலுகாவிற்கு என, ஒரு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க வேண்டும்.

