/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி ஆர்டர் மீதான ஆடை உற்பத்தி வேகமெடுத்தது!; புதிய ரக உள்ளாடைகளுக்கும் 'கிராக்கி'
/
தீபாவளி ஆர்டர் மீதான ஆடை உற்பத்தி வேகமெடுத்தது!; புதிய ரக உள்ளாடைகளுக்கும் 'கிராக்கி'
தீபாவளி ஆர்டர் மீதான ஆடை உற்பத்தி வேகமெடுத்தது!; புதிய ரக உள்ளாடைகளுக்கும் 'கிராக்கி'
தீபாவளி ஆர்டர் மீதான ஆடை உற்பத்தி வேகமெடுத்தது!; புதிய ரக உள்ளாடைகளுக்கும் 'கிராக்கி'
UPDATED : செப் 21, 2025 07:02 AM
ADDED : செப் 20, 2025 11:35 PM

திருப்பூர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வடமாநில வர்த்தகர்களின் ஆர்டரின் பேரில், ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி, திருப்பூரில் வேகமெடுத்துள்ளது.
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என, டில்லி வரையில் இயங்கும், முன்னணி உள்நாட்டு ஜவுளி சந்தைகளில், திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும் இடம்பெறுகின்றன. ஆண்டு முழுவதும், வெளிமாநில வர்த்தகர்கள், தொடர்ச்சியாக ஆர்டர் கொடுத்து, பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகளை கொள்முதல் செய்து விற்கின்றனர்.
பின்னல் துணியில், ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமியர், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இருப்பினும், திருப்பூரை பொறுத்தவரை, தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். ஆண்டு முழுவதும் நடக்கும், 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம், தீபாவளி பண்டிகைகால ஆர்டர்களாக இருக்கிறது.
அக்., 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக, நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில், நவராத்திரி விழாவுக்கு புத்தாடை அணியும் பாரம்பரியமும் இருக்கிறது. ஆடை கொள்முதல் ஆண்டு முழுவதும் நடந்தாலும், உள்ளாடை கொள்முதல் தீபாவளி பண்டிகையை சார்ந்தே, மொத்தமாக நடக்கிறது. திருப்பூரில் உற்பத்தியாகும் ப ருத்தி நுாலிழை பின்னல் பனியன், ஜட்டிகள், பாக்கெட் டிராயருக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகம். அதேபோல், குளிர்காலங்களில் பயன்படுத்த, செயற்கை நுாலிழையில் உற்பத்தியாகும் உள்ளாடைகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.
ஆடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை கால ஆர்டர் விசாரணை, செப்., மாத துவக்கத்தில் அதிகரித்தது. கடந்த ஆண்டு போலவே, அதிக ஆர்டர் கிடைத்து வருகிறது. குறைந்த ஆர்டராக இருந்தாலும், வேகமாக உற்பத்தி செய்து அனுப்பி வருகிறோம். உள்ளாடைகளை பொறுத்தவரை, முன்கூட்டியே தயாரித்து இருப்பு வைத்திருக்கிறோம். பின்னலாடை தயாரானதும், அவற்றுடன் சேர்த்து, கன்டெய்னர் லாரி மற்றும் ரயிலில் அனுப்பி வைக்கப்படும்.
பெரியவர்களுக்கு 'டி-சர்ட்', 'டிரக் பேன்ட்'' பெண்களுக்கான இரவு நேர ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான அனைத்துவகை ஆடைகளும் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். 'டி-சர்ட் 'ஆர்டர் மீது விசாரணை அதிகம் உள்ளது. செயற்கை நுாலிழையில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு 'டி-சர்ட்' மற்றும் பேன்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆர்டரும் கிடைத்துள்ளது. நவராத்திரி விடுமுறையை கணக்கிட்டு, உற்பத்தியை முன்கூட்டியே வேகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.