/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி; காத்திருக்கும் பிரகாசமான எதிர்காலம்
/
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி; காத்திருக்கும் பிரகாசமான எதிர்காலம்
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி; காத்திருக்கும் பிரகாசமான எதிர்காலம்
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி; காத்திருக்கும் பிரகாசமான எதிர்காலம்
ADDED : டிச 28, 2025 07:03 AM
திருப்பூர்: எதிர்கால வர்த்தக நலன்கருதி, பருத்தி ஆடைகளுடன், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
உலக நாடுகள், 'சீனா ஒன் பிளஸ்' என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். அதன்படி, சீனாவுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகள், அடுத்தபடியாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய முன்வந்து கொண்டிருக்கின்றன. சீனா, ஆண்டுக்கு, 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆடை ஏற்றுமதி செய்கிறது; அதில், 10 சதவீத ஆர்டர் இந்தியாவுக்கு மாறியிருந்தால் கூட, நமக்கு இருமடங்கு வளர்சிக்கான வாய்ப்பு இருந்தது. இதேவேகத்தில் வளர்ச்சி பெற, நமது தொழில் திறனை மேம்படுத்த வேண்டும். பிரமாண்டமான எதிர்காலம் உள்ளது; அதற்கு நாம் தயாராக வேண்டும்.
'கிளஸ்டர்' அந்தஸ்து
ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால், நான்கு கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு இத்தொழில் மட்டுமே உள்ளது. திருப்பூர் என்பது, பின்னலாடை தொழில் நகரம் என்பதை காட்டிலும், 'கிளஸ்டர்' என்ற அந்தஸ்தில் உள்ளது. மற்ற தொழில்துறைகளை காட்டிலும், பின்னலாடை தொழிலில் மட்டுமே குறைந்த முதலீட்டில், நிறைவாக தொழில் துவக்க முடியும்.
திட்டங்கள் உதவிகரம்
பருத்தி நுாலிழை ஆடைகள் மட்டுமின்றி, செயற்கை நுாலிழை ஆடைகள் உற்பத்திக்கு படிப்படியாக முன்னேற வேண்டும். அரசு தரப்பும், தேவையான திட்டங்களை வழங்கி வருகிறது. மத்திய அரசின், பி.எல்.ஐ., திட்டம் மிக உதவியாக இருக்கும். செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. திருப்பூரில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' செய்யப்படுகிறது. இந்த கட்டமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை. இதனால், பல்வேறு நாடுகள் திருப்பூரை வியந்து பாராட்டி வருகின்றன.
இத்தகைய செயல்பாடு வாயிலாக, திருப்பூர் ஆடைகளுக்கு, பசுமை ஆடைகள் என்ற அந்தஸ்தும், அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. வரும் காலங்களில் மென்மேலும் அதிகரிக்கும்.
சவாலே... சமாளி
தமிழகம் மிகப்பெரிய சவால்களை சமாளிக்கவும் தயாராக வேண்டும். அதிகம் பருத்தி விளையும் மாநிலங்கள், நாமே துணி மற்றும் ஆடை உற்பத்தியை துவக்கலாம் என திட்டமிட்டுள்ளன. அதற்காக, அதிகபட்ச முதலீடுகளை ஈர்த்து வருகின்றன. திருப்பூர் பின்னலாடை தொழிலில், புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். பருத்தி ஆடைகளுடன், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மதிப்பு கூட்டப்பட்டஆடை தயாரிப்பில், புத்தாக்க தொழில்களையும், தொழில்நுட்பங்களையும் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், பாரம்பரியமான ஆடை உற்பத்தி தொழிலை தக்கவைத்து மேம்படுத்த முடியும்; இத்தொழிலில், ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

