/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை - சென்னை முன்பதிவில்லா ரயில் இயக்கப்படுமா?
/
கோவை - சென்னை முன்பதிவில்லா ரயில் இயக்கப்படுமா?
ADDED : ஏப் 26, 2024 02:07 AM

திருப்பூர்;'கோவையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட வேண்டும்' என, ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கோவையை கடந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கு தினசரி 9 ரயில்களும், வாராம்தோறும் 10 ரயில்களும் என, 19 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில், வந்தே பாரத், சதாப்தி, இன்டர்சிட்டி, ஜெய்ப்பூர், கோவை எக்ஸ்பிரஸ் உட்பட ஏழு ரயில்கள் கோவையில் இருந்து புறப்படுபவையாக உள்ளன. மற்றவை திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் இருந்து கோவை வந்து சென்னையை கடந்து செல்கின்றன.
சேலம் கோட்டத்தில் அதிகளவில் பயணியர் பயணிக்கும் வழித்தடத்தில் முதன்மையானதாக கோவை - சென்னை உள்ளது. முன்பதிவு டிக்கெட் பெற, 60 நாள் முன்பிருந்தே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள், முன்பதிவில்லா பெட்டியில் பயணம் முடியும் வரை நின்றும், படிக்கட்டில் தொங்கியபடியும் பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, சேரன், கோவை, இன்டர்சிட்டி, நீலகிரி எக்ஸ்பிரஸ்களில் வார விடுமுறை நாட்களில் கூட்டத்துக்கு எப்போதும் குறைவில்லை.
ரயில் பயணியர் கூறுகையில், 'வடமாநிலத்தவர் வசதிக்காக கோவையில் இருந்து பீஹார், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்பதிவில்லா ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. தமிழகம், மேற்கு மண்டல பயணியர் நலன் கருதி கோவை - சென்னை இடையே, குறைந்தபட்ச பெட்டிகளுடன் முன்பதிவில்லா ரயில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். கோடை விடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைவர். கோவை - சென்னை இடையே முன்பதிவில்லா ரயில் இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்' என்றனர்.

