/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் இன்றி பயணிகள் பரிதவித்தது ஏன்?
/
பஸ் இன்றி பயணிகள் பரிதவித்தது ஏன்?
ADDED : ஏப் 21, 2024 12:48 AM

திருப்பூர்;''ஓட்டுப்பதிவுக்கு முந்தைய தினம் மற்றும் ஓட்டுப்பதிவு நாளில், திருப்பூரில் இருந்து இயன்றவரை கூடுதல் பஸ்களை இயக்கியும், ஒரே நேரத்தில் குவிந்ததால், பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது'' என்கின்றனர் போக்குவரத்து கழக அதிகாரிகள்.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்றுமுன்தினம் நடந்தது. ஓட்டளிப்பதற்காக வாக்காளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக திருப்பூரில் இருந்து தொலைதுார மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், கடந்த 18ம் தேதி இரவு, 09:00 மணி வரை, 20 சதவீத பயணிகள் கூட பஸ் ஸ்டாண்ட் வரவில்லை.
வழக்கமான பஸ், சிறப்பு பஸ்களை தொடர்ந்து அடுத்தடுத்து பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்க முடியாது என்பதால், பஸ் ஸ்டாண்டில் இருந்து, 40 முதல், 60 பயணிகளுடன் அதிகாரிகள் பஸ்களை அனுப்பி வைத்தனர்.
இரவில் அதிகரித்தகூட்டம்
கோவில்வழி, புதிய மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்டில் இரவு, 10:00 மணிக்கு மேல் வாக்காளர்கள் கூட்டம் அதிகரித்தது. ஏற்பாடு செய்திருந்த பஸ்களை அனுப்பி வைத்த நிலையில், வேறு வேறு பஸ் ஸ்டாண்ட், டிப்போவில் இருந்து பஸ்களை கூடுதலாக வரவழைத்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் மேலும் அதிகமானது. அதே நேரம், நள்ளிரவு, அதிகாலையில் சற்று கூட்டம் குறைந்ததால், அதிகாரிகள் பயணிகளிடம் தப்பினர்.
ஆனால், தேர்தல் நாளன்று மாலைக்குள் சொந்த ஊர் சென்று ஓட்டளித்து விட வேண்டும் என்ற ஆவலுடன் நேற்றுமுன்தினம் காலையில் மீண்டும் பலர் பஸ் ஸ்டாண்ட் படையெடுத்தனர். திருப்பூரில் ஓட்டளித்தவர்களோ சனி, ஞாயிறு சேர்த்து விடுமுறையை கொண்டாட வெளியூர் செல்ல பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர்.
முதல் நாள் இரவை விட, காலையில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்த போதும், நள்ளிரவு, அதிகாலையில் வெளி மாவட்டங்களுக்கு சென்ற பஸ் டிரைவர், நடத்துனர்கள், ஓட்டளிக்க டிப்போ, பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்தி விட்டு சென்றதால், பஸ்கள் திருப்பூர் திரும்பவில்லை.
இயக்கவேபஸ்கள் இல்லை
இதனால், புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகமாக, சிறப்பு பஸ்கள் இயக்கத்துக்கு இல்லாத சூழல் உருவாகியது. கோவில்வழியில் பஸ்கள் புறப்படும் போதே, 110 பேர் வரை மதுரை பஸ்சில் இருந்ததால், பஸ்கள் தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வராமல் பை-பாஸ் வழியாக பயணித்தது.
புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து புறப்பட்ட திருச்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை பஸ்கள் காங்கயம் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் செல்லாததால், பயணிகள் கோபமடைந்தனர்.
திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகள் சமாதானம் செய்து, தாமதமாக அடுத்தடுத்து வந்த பஸ்களில் பயணிகளை அனுப்பினர்.
டிரைவர், நடத்துனர்களுக்கு
தபால் ஓட்டு வழங்கப்படுமா?
போக்குவரத்துக்கழக அலுவலர்கள் கூறுகையில்,'தேர்தலில் டிரைவர், நடத்துனர் ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பளிக்க வேண்டும். 250 முதல், 300 கி.மீ., பஸ் ஓட்டும் டிரைவர், திரும்ப வந்து டிரிப் முடித்து விட்டு சென்று ஓட்டளிக்க முயன்றால், ஓட்டுப்பதிவே முடிந்து விடும். இனி வரும், 2026 சட்டசபை தேர்தலில், 250 கி.மீ.,க்கு அதிகமாக பஸ் இயக்குவோருக்கு, தபால் ஓட்டுப்பதிவு வழங்க வேண்டும்,' என்றனர்.
642 பஸ்கள் இயக்கம்
திருப்பூர், கோவில்வழி, பஸ் ஸ்டாண்டில் இருந்து வழக்கமாக, 86 பஸ்கள் இயக்கப்படும்; கூடுதலாக, 160 பஸ்கள் சேர்த்து, 226 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, வழக்கமாக, 102 பஸ்கள் இயக்கப்படும்; கூடுதலாக, 110 பஸ் சேர்த்து 212 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து வழக்கமாக, 124 பஸ்கள் இயக்கப்படும்; கூடுதலாக, 80 பஸ்கள் சேர்த்து, 204 பஸ்கள் இயக்கப் பட்டுள்ளது. மொத்தம், 642 பஸ்கள் 17, 18, 19ம் தேதி மூன்று நாட்கள் இயக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அலுவலர்கள் கணக்குப்படி, மொத்தம், ஆறு லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

