/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
/
பிரதான ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
பிரதான ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
பிரதான ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
ADDED : ஜூலை 23, 2024 02:29 AM

உடுமலை;உடுமலை ராஜேந்திரா ரோட்டில், ஆக்கிரமிப்பு அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை ராஜேந்திரா ரோடு, சுற்றுலா செல்லும் வாகனங்களும், கிராமப்பகுதிகளுக்கு பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தளி ரோடு செல்வதற்கான வழியாகவும் இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்த ரோட்டில் தினசரி சந்தை, நகராட்சி நடுநிலைப்பள்ளி, மத்திய அரசு கேந்திரிய பள்ளியும், தனியார் பள்ளிகளும் உள்ளன. இதனால் பள்ளி மாணவர்களும் அவ்வழியாக செல்கின்றனர்.
பரபரப்பான இந்த ரோட்டில், வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. மேலும் சந்தை வளாகத்துக்கு செல்வதற்கான சரக்கு வாகனங்களும், வழியை மறைத்து நிறுத்தப்படுகின்றன.
காலை நேரங்களில், சரக்கு வாகனங்கள் வரிசையாக சந்தைக்குள் செல்வதற்கு காத்திருப்பதால், எதிர்புறம் மற்ற வாகனங்களும் செல்ல முடிவதில்லை. தினசரி சந்தைக்கு ஒரு நுழைவாயில் மட்டுமே இருப்பதால், இப்பிரச்னை தொடர்ந்து வருகிறது.
சந்தையின் வெளிப்புறம், தள்ளுவண்டிகள், தற்காலிக கடைகள் என பலவும் ரோட்டோரத்தின் ஆக்கிரமிப்புகளாக உள்ளன. இதனால் சந்தைக்கு வரும் வாகனங்கள், நிறுத்த வழியின்றி ரோட்டில் நிறுத்துகின்றனர்.
காலை நேரங்களில், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர், இந்த நெரிசலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
போக்குவரத்து போலீசார், பஸ் ஸ்டாண்டின் அருகில் கண்காணிப்பில் இருக்கின்றனர். இருப்பினும் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை.
சில நேரங்களில் கால தாமதத்தால், அப்பகுதியை கடந்தவுடன் அதிவிரைவாக சென்று விபத்துக்குள்ளாகின்றனர். ரயில்நிலையம் செல்வோரும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேறுவழியாக தொலைதுாரம் சென்று வர வேண்டியுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், நகராட்சி நிர்வாகமும் மவுனமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

