/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டில் இருந்தபடி ஓட்டுப்பதிவு; விதிமுறை என்ன?
/
வீட்டில் இருந்தபடி ஓட்டுப்பதிவு; விதிமுறை என்ன?
ADDED : ஏப் 03, 2024 10:53 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் பணிகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமைவகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம்முன்னிலை வகித்தார்.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர், வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து 12டி படிவம் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.
அவர்களது வீடுகளுக்கு ஓட்டுப்பெட்டி எடுத்துச்சென்று, தபால் ஓட்டு பெறவேண்டும். '12டி' படிவம் வழங்கி விட்டு, திடீரென, ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்கிறேன் என வாக்காளர் தெரிவித்தால், அதனை அனுமதிக்க முடியாது. தபால் ஓட்டு படிவத்தில், ஜெல் பென் பயன்படுத்தக்கூடாது; பால்பாய்ன்ட் பேனா பயன்படுத்தி, விருப்பமான வேட்பாளருக்கு, 'டிக்' செய்ய வேண்டும்.
வாக்காளரின் வீட்டினுள் வைத்து மட்டுமே, ஓட்டளிக்கப்பட வேண் டும். ஒரே வீட்டில் பல நபர்கள் ஓட்டளிக்க கூடாது. வாக்காளரின் வீட்டினுள் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ வேட்பாளர்களின் ஏஜென்டுகளை அனுமதிக்க கூடாது. வரும் 5ம் தேதி முதல் இதற்கான நடவடிக்கைகள் துவங்குகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

