/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் ஆக்கிரமிப்பால் கால்வாயாக மாறிய ஓடை! விபரீதம் நிகழும் முன் விழிப்பது அவசியம்
/
புதர் ஆக்கிரமிப்பால் கால்வாயாக மாறிய ஓடை! விபரீதம் நிகழும் முன் விழிப்பது அவசியம்
புதர் ஆக்கிரமிப்பால் கால்வாயாக மாறிய ஓடை! விபரீதம் நிகழும் முன் விழிப்பது அவசியம்
புதர் ஆக்கிரமிப்பால் கால்வாயாக மாறிய ஓடை! விபரீதம் நிகழும் முன் விழிப்பது அவசியம்
ADDED : மே 22, 2024 12:38 AM

திருப்பூர்:நொய்யலில் கலக்கும் ஜம்மனை பள்ளம் ஓடை, புதர் செடிகள் மண்டி, கால்வாயாக மாறியுள்ளது; வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன், துார்வாரப்பட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூரின் மையப்பகுதியில் நொய்யல் ஆறு செல்கிறது. நகரில் உள்ள ஜம்மனை ஓடை, சங்கிலிபள்ளம், சபரி ஓடை ஆகியன இந்த ஆற்றுக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன.
நகரின் தென்மேற்கு பகுதியில் இருந்து, பல கி.மீ., துாரத்துக்கு ஜம்மனை ஓடை வருகிறது. இந்த ஓடை, தென்னம் பாளையம், ஏ.பி.டி., ரோடு வழியாக, மங்கலம் ரோட்டை கடந்து நொய்யல் ஆற்றில் சங்கமிக்கிறது.
இந்த ஓடை கரை, தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை அருகே டி.எம்.சி., காலனியை கடந்து வரும் பகுதியில் பெருமளவு கழிவுகள் கொட்டப்படுகிறது. சந்தை வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தினமும் டன் கணக்கில் இந்த ஓடையில் வீசப்படுகின்றன. பல நுாறு மீட்டர் தொலைவுக்கு ஓடையின் இரு கரைகள், ஓடையின் மையத்தில் செடி, புதர் வளர்ந்து, ஓடையை ஆக்கிரமித்துள்ளது.
தற்போது கோடை மழை, வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே பெய்து வருகிறது. பெருக்கெடுக்கும் மழை வெள்ளம், குடியிருப்புகளுக்குள் புகுவது; வெள்ளத்தில் கால்நடைகள் அடித்து செல்வது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், ஜம்மனை ஓடையிலும் மழைநீர் வெளியேற துவங்கி யிருக்கிறது. எனவே, வெள்ளம் பெருக்கெடுக்கும் முன், ஓடையை துார் வாரி சுத்தம் செய்ய வேண்டியது, சம்மந்தப்பட்ட துறையின் பணி.
மறக்காத துயரம்
இப்பகுதியில், கடந்த, 2011 நவ.,6ம் தேதி நள்ளிரவு வீடுகளில் வெள்ளம் புகுந்தது; வீட்டின் கூரைகளில் தஞ்சம் புகுந்தனர் மக்கள். அன்றிரவு பெய்த பெரு மழையால் சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டியிருந்த கூரை வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது; உயிரிழப்பும் ஏற்பட்டது. ஏராளமானோர் வீடிழந்தனர்.
'சமீப நாட்களாக திருப்பூரிலும் பெருமழை பெய்வது, இதுபோன்ற அசம்பாவிதங்களை மக்கள் கண் முன் கொண்டு வருகிறது' எனக்கூறும் தன்னார்வலர் கள், 'மழைசேதம் ஏற்படாத வகையிலான நடவடிக்கையை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும்' என, யோசனை தெரிவிக்கின்றனர்.

