/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதி வர்த்தக தணிக்கை எளிதாக வேண்டும்
/
ஏற்றுமதி வர்த்தக தணிக்கை எளிதாக வேண்டும்
ADDED : ஏப் 21, 2024 12:48 AM

திருப்பூர்;திருப்பூர் தொழில்துறை நிலைத்தன்மை மேம்பாட்டு ஆலோசனை கூட்டம், ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்தது.
சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசுகையில், ''திருப்பூர் தொழில் களத்தில் ஏற்படும் பிரச்னைகளை பற்றி ஆலோசித்து, தீர்வுகளை கண்டறிய திருப்பூர் தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பு, தகுந்த உதவிகளை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வகை தணிக்கை முறைகளை மாற்றி, குறைவான செலவில், குறுகிய காலத்தில் தணிக்கை மேற்கொள்ள வழிகாட்ட வேண்டும். தணிக்கையின் போது குழப்பத்தை தீர்க்க, பிராண்ட் தணிக்கையில் ஆன்லைன் பண பட்டுவாடா முறையை ஏற்க வேண்டும். உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றவே, 'டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச்' என்ற அமைப்பினர் உறுப்பினராக இணைந்துள்ளோம். அனைத்து தணிக்கை அமைப்புகளுடன், கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.
திருப்பூர் தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் பேசுகையில்,''தொழிற்சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை, பிராண்ட்கள், வர்த்தகர்கள் என, அனைத்து தரப்பினரையும் உறுப்பினராக கொண்டு, தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. தொழில்துறையினர் பிரச்னைகள் ஒருமித்த குரலில் எடுத்துரைக்கப்பட வேண்டும்,'' என்றார்.
பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''திருப்பூரில் செயல்படுத்தப்படும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம், மரம் வளர்ப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில், முன்னோடியாக இருக்கிறோம். இவற்றை, ஆவணப்படுத்தி, வர்த்தகர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்; 'நெறிமுறை வர்த்தக முன்னெடுப்பு' என்ற அமைப்பு மூலம், இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,'' என்றார்.
துணை தலைவர் ராஜ்குமார், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் பேசுகையில், ''திருப்பூர் பல்வேறு புதிய பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. சில அமைப்பினர், திருப்பூர் குறித்த தவறான தகவல்களை வர்த்தகர்களிடம் கொண்டு சேர்க்கின்றன.
இத்தகைய குழப்பத்தை போக்க, தொழில் பங்களிப்போர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சேவை அவசியம். நமது அமைப்பில், தேசிய அளவிலான மற்றும் உலக அளவிலான அமைப்புகளும் உறுப்பினர்களாக இணைய விருப்பம் தெரிவித்துள்ளன,'' என்றனர்.

