/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டு குடிநீர் திட்ட குளறுபடி; 7 கிராமங்கள் பாதிப்பு காலி குடங்களுடன் பெண்கள் ரோடு மறியல்
/
கூட்டு குடிநீர் திட்ட குளறுபடி; 7 கிராமங்கள் பாதிப்பு காலி குடங்களுடன் பெண்கள் ரோடு மறியல்
கூட்டு குடிநீர் திட்ட குளறுபடி; 7 கிராமங்கள் பாதிப்பு காலி குடங்களுடன் பெண்கள் ரோடு மறியல்
கூட்டு குடிநீர் திட்ட குளறுபடி; 7 கிராமங்கள் பாதிப்பு காலி குடங்களுடன் பெண்கள் ரோடு மறியல்
ADDED : ஜூலை 22, 2024 09:11 PM

உடுமலை;திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், முறையாக குடிநீர் வழங்காததைக்கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், ஆண்டியகவுண்டனுார், பெரிசனம்பட்டி, உரல்பட்டி, குட்டியகவுண்டனுார், கிளுவன் காட்டூர், ஜக்கம்பாளையம், அமராவதி நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இங்கு, 2,946 வீடுகளில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு , திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, மடத்துக்குளம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், ஊராட்சியிலுள்ள, 25 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு, நாள் ஒன்றுக்கு, 5.55 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.
கூட்டு குடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டும், அதிகாரிகள் அலட்சியம், திட்ட குளறுபடி, சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல் உள்ளது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், 1.75 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது.
அதிலும், அமராவதி சைனிக் பள்ளி, தனியார் பள்ளிகள், குடியிருப்புகள், சுற்றுலா மையம் என மக்கள் அதிகம் வந்து செல்லும் அமராவதி நகர் பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமையாக வழங்கப்படுவதில்லை.
ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி கிராமங்களுக்கு ஆறு மாதமாக பற்றாக்குறை குடிநீர் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், ஒரு வாரமாக முழுமையாக குடிநீர் வழங்காததால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன், ஆண்டியகவுண்டனுாரில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
பி.டி.ஓ., சுப்ரமணியம், ஊராட்சித்தலைவர் மோகனவள்ளி ராஜசேகர், குடிநீர் வாரிய உதவி பொறியாளர் சின்னச்சாமி மற்றும் குமரலிங்கம் போலீசார் பேச்சு நடத்தினர்.
உடனடியாக முழுமையான அளவு குடிநீர் வழங்கப்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

