/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேகமெடுக்கிறது பிரசாரம் ;வேட்பாளர்களின் வேறுபட்ட யுத்திகள் ; 2 சுற்று நிறைவு; இன்னும் 2 சுற்று
/
வேகமெடுக்கிறது பிரசாரம் ;வேட்பாளர்களின் வேறுபட்ட யுத்திகள் ; 2 சுற்று நிறைவு; இன்னும் 2 சுற்று
வேகமெடுக்கிறது பிரசாரம் ;வேட்பாளர்களின் வேறுபட்ட யுத்திகள் ; 2 சுற்று நிறைவு; இன்னும் 2 சுற்று
வேகமெடுக்கிறது பிரசாரம் ;வேட்பாளர்களின் வேறுபட்ட யுத்திகள் ; 2 சுற்று நிறைவு; இன்னும் 2 சுற்று
ADDED : ஏப் 07, 2024 11:34 PM
திருப்பூர்;பிரசாரத்துக்கு ஒன்பது நாட்கள் மட்டுமே இருப்பதாலும், ரம்ஜான், தமிழ்ப்புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு பண்டிகைகள் வருவதாலும், பிரசார பயணத்தை உற்சாகப்படுத்த, வேட்பாளர்கள் முழு வீச்சில் தயாராகிவிட்டனர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆறு சட்டசபை தொகுதிகளுக்குள் சுற்றி வருவதால், ஏககாலத்தில் பரபரப்பு இல்லாமல் தொகுதி காட்சியளிக்கிறது. இருப்பினும், கட்சிக்கொடி கட்டிய'டூ வீலர்'கள், பட்டாசு சத்தம், ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செய்து, அந்தந்த கட்சிகளில் தேர்தல் களைகட்டியுள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதியை பொறுத்தவரை, அ.தி.மு.க., - இந்திய கம்யூ., - பா.ஜ., என மும்முனை போட்டி நிலவுகிறது. திருப்பூர் தொகுதிக்குள், வேட்பாளர் பிரசாரத்தை துவக்கி, ஆறு சட்டசபை தொகுதிகளுக்குள், ஒருசுற்றும், சில கட்சியினர் இரண்டு சுற்றுகளும் பிரசாரத்தை முடித்துள்ளனர்.
களைகட்டும் பிரசாரம்
வேட்பாளர், அவரது பயணத்திட்டப்படி பிரசாரம் செய்தாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அவரவர் தொகுதிகளுக்குள் களமிறங்கியுள்ளனர். வழக்கமாக, தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி இருக்கும். இம்முறை, பா.ஜ.,வும் மூன்றாவது கூட்டணியாக இருப்பதால், திருப்பூர் தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் களை கட்டிக்கொண்டிருக்கிறது.
பிரசார யுத்திகள்
இந்திய கம்யூ.,வினர் தி.மு.க., அரசின் சாதனை களை கூறியும், மத்திய அரசை குறைகூறியும் ஓட்டுக்கேட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் செய்த, அவிநாசி அத்திக்கடவு திட்டம் போன்ற நலத்திட்டங்கள், தற்போதைய வரி உயர்வுகள், தொழில்களுக்கான மின் கட்டண சுமை போன்ற குறைபாடுகளை எடுத்துக்கூறி, ஓட்டுக்கேட்கின்றனர். எம்.ஜி.ஆர்., நடித்த படங்களில் வரும் தத்துவ பாடல்களை ஒலிபரப்பியே, கட்சியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
பா.ஜ.,வினர் மத்திய அரசு திட்டங்களை முன்வைப்பதோடு, மாநில அரசின் குறைபாடுகளை பளிச்சென கூறிவருகின்றனர்.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, 19ம் தேதி நடக்கிறது; வரும், 17ம் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அதன்படி, முழுமையாக ஒன்பது நாட்கள் மட்டுமே இருக்கிறது. இனிமேல்தான், முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி, வாசன் உள்ளிட்டோரின் பிரசாரம் நடக்கப்போகிறது.
வைட்டமின் 'ப'
தி.மு.க., - அ.தி.மு.க., வினர், 'பூத்' கமிட்டிகளுக்கு வைட்டமின் 'ப' மூலமாக ஊக்குவித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, ஒரு பூத்துக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளன; இரண்டு கட்டமாக, தலா, 5000 ரூபாய் வீதம் பட்டுவாடா முடிந்துவிட்டது; மூன்றாம் கட்டமாக, பெரிய தொகை கிடைக்கும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
முக்கிய கட்சி வேட்பாளர்கள், லோக்சபா தொகுதி முழுவதும் இரண்டு சுற்று பயணத்தை முடித்திருப்பார்கள். இருப்பினும், சரியாக ஒன்பது நாட்கள் மட்டுமே மீதியிருக்கின்றன. எனவே, அதற்கு ஏற்ப, ஒவ்வொரு தொகுதியிலும் விடுபட்ட பகுதிகளை கணக்கிட்டு, மேலும் இரண்டு சுற்று பிரசார பயணத்தை தயாரித்துள்ளனர்.
தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்ஜான் பண்டிகை, தமிழ்வருட பிறப்பு போன்ற பண்டிகைகள் வரப்போகின்றன. அவற்றையும் கணக்கிட்டே, வேட்பாளரின் மூன்றாம் மற்றும் நான்காம் பிரசார பயணம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

