/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
880 ரேஷன் கடைக்கு புதிய கருவி வழங்கல்:கண் கருவிழி பதிவு செய்யலாம்
/
880 ரேஷன் கடைக்கு புதிய கருவி வழங்கல்:கண் கருவிழி பதிவு செய்யலாம்
880 ரேஷன் கடைக்கு புதிய கருவி வழங்கல்:கண் கருவிழி பதிவு செய்யலாம்
880 ரேஷன் கடைக்கு புதிய கருவி வழங்கல்:கண் கருவிழி பதிவு செய்யலாம்
UPDATED : மே 21, 2024 09:55 AM
ADDED : மே 21, 2024 12:31 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 880 முழு நேர ரேஷன் கடைகளில், கண் கருவிழி, கை ரேகை பதிவு, பிரின்டட் பில் வழங்கும் வசதியுடன் கூடிய புதிய பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளிலும், பாய்ன்ட் ஆப் சேல் கருவி மூலம், கார்டு தாரர் கைரேகை விவரங்கள் உறுதி செய்யப்பட்டு, உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மற்ற துறைகள் போன்று குடிமைப்பொருள் வழங்கல் துறையிலும், மேம்பட்ட தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாய்ன்ட் ஆப் சேல் கருவிகளில், அடிக்கடி நெட்வொர்க் பிரச்னை; கை ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டது. 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி இருந்தாலும்கூட, வாங்கும் உணவுப்பொருள் விவரங்களை, ரேஷன் கடை விற்பனையாளர்கள், துண்டுச்சீட்டிலேயே எழுதி கொடுத்தனர்.
இதற்கு தீர்வாக, கைரேகை பதிவு, பிரின்டர், வசதிகளுடன் கூடிய புதிய பாய்ன்ட் ஆப் சேல் கருவியை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த டிச., மாதம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், 60 முதல் 70 ரேஷன் கடைகளுக்கு புதிய கருவி வழங்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.
வெள்ளோட்டம் வெற்றி பெற்றதால், அனைத்து ரேஷன்கடைகளுக்கும் புதிய கருவி வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன்கடைகள் உள்ளன. மொத்தமுள்ள, 880 முழுநேர ரேஷன் கடைகளில், சோதனை ஓட்டத்தின்போது, 70 ரேஷன் கடைகளுக்கு, கண் கருவிழி பதிவு மற்றும் பாயின்ட் ஆப் சேல் புதிய கருவி வழங்கப்பட்டது. மீதமுள்ள, 810 முழுநேர ரேஷன்கடைகளுக்கு, வழங்கப்பட்டு, அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்களை வரவழைத்து, புதிய கருவி வழங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு தாலுகாவில் உள்ள 125 ரேஷன்கடைகளுக்கு, அங்கேரிபாளையம் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நேற்று, பாய்ன்ட் ஆப்சேல் கருவி வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனி தாசில்தார் ஏ.ரவிச்சந்திரன், தனி வருவாய் ஆய்வாளர் ராகுல் ஆகியோர், விற்பனையாளர்களிடம் வழங்கினர். மாவட்ட வழங்கல் பிரிவு மேலாளர் அருள்குமார், கார்டுதாரர் விவரம் சரிபார்ப்பது; பில் வழங்குவது குறித்து பயிற்சி அளித்தார்.
'பில்' கிடைக்கும்!
புதிய பாய்ன்ட் ஆப் சேல் கருவியில், பிரின்டர் வசதி உள்ளது. கடை எண், கார்டுதாரர் பெயர், தேதி, அரிசி, துவரம் பருப்பு என உணவுப்பொருட்களின் விவரம் மற்றும் விலை ஆகியவை தெளிவாக அச்சிடப்பட்டு, கார்டுதாரருக்கு வழங்கப்படும். இதனால், உணவுப்பொருள் விவரங்களை கைகளால் எழுதுவது தவிர்க்கப்படும்.
இரண்டு வெவ்வேறு நிறுவன 5 ஜி., சிம்கார்டு பொருத்தப்பட்டிருப்பதால், இணைய இணைப்பு கிடைக்கவில்லை என்கிற பேச்சுக்கே இடமிருக்காது; ரேஷன் பொருள் வினியோகத்தில் காலதாமதமும் தவிர்க்கப்படும். மாவட்ட வழங்கல் பிரிவினர் கூறுகையில், 'சோதனை ஓட்டமாக, ஏற்கனவே, 70 முழு நேர ரேஷன் கடைகளுக்கு புதிய பாய்ன்ட் ஆப் சேல் கருவி வழங்கப்பட்டது; தற்போது, மீதமுள்ள 810 கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய கருவியில், கண் கருவிழி ஸ்கேனர் இணைத்து பயன்படுத்தமுடியும். 255 பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு விரைவில் பாய்ன்ட் ஆப் சேல் கருவி வழங்கப்படும்,' என்றனர்.
புதிய பாய்ன்ட் ஆப் சேல் கருவியுடன், கூடுதல் இணைப்பாக, கண் கருவிழி ஸ்கேனரை இணைக்க முடியும். கைரேகை பதிவு செய்ய முடியாதோருக்கு, கருவிழி பதிவு செய்து, விவரங்களை உறுதிப்படுத்தி விடலாம்

