/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களத்தில் 13 பேர்; சூடுபிடிக்குது பிரசாரம்
/
களத்தில் 13 பேர்; சூடுபிடிக்குது பிரசாரம்
ADDED : ஏப் 01, 2024 03:43 AM
திருப்பூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே திருப்பூரில் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்பட்டது. இரு கூட்டணிகள் இடையேயும் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறியால் மர்மம் நிலவியது.
இறுதியாக தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ.,வுக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் குறித்து முடிவு வெளியாவதில் இழுபறி நீடித்தது. இறுதியில், சிட்டிங் எம்.பி., சுப்பராயன் பெயர் அறிவிக்கப்பட்டது. அதே போல், அ.தி.மு.க.,கூட்டணியில் மியூசிக் சேர் போட்டியே நடந்து, இறுதியில், அருணாசலம் பெயர் அறிவிக்கப்பட்டு, இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. பா.ஜ.,வைப் பொறுத்தவரை, வேட்பாளர் யார் என்பதில் முதல் கட்டத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையிலும், முருகானந்தம் பெயர் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்த வரை, தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே, சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே பிரசாரத்தை துவங்கி விட்டார்.
திருப்பூர் தொகுதியில் போட்டியிடட 38 பேர் மொத்தம் 46 மனுக்கள் தாக்கல் செய்தனர். பரிசீலனையின் போது, தள்ளுபடி செய்த மனுக்கள் போக 16 பேர் களத்தில் இருந்தனர். 3 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது, 13 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.
இவர்களில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சில நாட்களாக பிரசாரத்தை துவங்கியுள்ளனர். பிற கட்சி மற்றும் சுயேச்சைகள் இன்னும் பிரசாரத்தை துவங்கவில்லை.
ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று முதல் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளுக்குள் மட்டுமே பிரசாரம் நடக்கிறது. அடுத்தடுத்து தொகுதியில் உள்ள பிற சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மாவட்ட அளவிலான கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பகுதிவாரியாக வாக்காளர்களைச் சந்தித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டமாக இவற்றின் முக்கிய தலைவர்கள் பிரசார கூட்டங்களும் நடத்தும் வகையில் பணிகள் நடக்கிறது. வரும் நாட்களில் முழு வீச்சில் பிரசாரமும், தேர்தல் கவனிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

