/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வாடகை தராத சார் - பதிவாளர் ஆபீசுக்கு பூட்டு
/
வாடகை தராத சார் - பதிவாளர் ஆபீசுக்கு பூட்டு
ADDED : ஏப் 08, 2025 06:49 AM

துாத்துக்குடி : கழுகுமலையில், 17 மாதங்களாக வாடகை கொடுக்காத சார் - பதிவாளர் அலுவலகத்தை கட்டட உரிமையாளர் பூட்டினார்.
துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் சார் - பதிவாளர் அலுவலகம் கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், 2023 செப்., 12 முதல், மாதம் 40,000 ரூபாய் வாடகைக்கு இயங்கி வருகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து, குறைவான தொகை வாடகையாக நிர்ணயம் செய்துள்ளனர். இதுதொடர்பாக, பிரச்னை நிலவி வருவதால், 17 மாதங்களாக கந்தசாமிக்கு வாடகை வழங்கப்படவில்லை.
கழுகுமலை போலீசில் கந்தசாமி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று காலை அங்கு சென்ற அவர், பூட்டப்பட்டிருந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் மேலும் ஒரு பூட்டை போட்டு பூட்டியுள்ளார்.
காலையில் அலுவலகத்தை திறக்க வந்த ஊழியர்கள், கூடுதலாக ஒரு பூட்டு இருந்ததால் திறக்க முடியாமல் காத்திருந்தனர்.
பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கந்தசாமியுடன் போலீசார், அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
விரைவில் வாடகை தொகை வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, கந்தசாமி கட்டடத்தை திறந்து விட்டார்.

