/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
விவசாய நிலங்களில் பட்டாசு ஆலை துவங்க எதிர்ப்பு
/
விவசாய நிலங்களில் பட்டாசு ஆலை துவங்க எதிர்ப்பு
ADDED : ஜூலை 25, 2025 02:09 AM

துாத்துக்குடி:விவசாய நிலங்களில் பட்டாசு ஆலை துவங்க எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா, முத்துலாபுரம் பிர்காவில் முத்துலாபுரம், இனாம் அருணாசலபுரம், கருப்பூர், கீழ்நாட்டுக்குறிச்சி உட்பட 13 கிராமங்களில் மழையை நம்பி, மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்கா, மிளகாய், கொத்தமல்லி, மிளகாய், வெள்ளைச் சோளம் போன்ற சிறுதானியங்கள், பயிறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில், விவசாய நிலங்களின் அருகே புதிதாக பட்டாசு ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி விவாசயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறியதாவது:
மானாவாரி பயிர் செய்யும், 10,500 ஏக்கர் நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்றி, விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளை பாதுகாக்க 2004ல், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியில் வைப்பாறு -- அர்ஜுனா நதிகளின் குறுக்கே 24 அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.
பல ஆண்டுகளாக பயிரிடப்படாமல் தரிசாக கிடந்த நிலங்கள் இதனால் விளை நிலங்களாக மாற்றப்பட்டன. இந்நிலையில், மாவட்டத்தின் வட கடைகோடி பகுதியான முத்துலாபுரம் பிர்காவில் அயன்ராஜாபட்டி, மாசார்பட்டி, இனாம் அருணாசலபுரம், அயன் வடமலாபுரம், மாவில்பட்டி, அயன்கரிசல்குளம் போன்ற பகுதிகளில் புதிய பட்டாசு ஆலை துவங்க 50க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தற்போது, 10 ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மூன்று ஆலைகள் செயல்பட துவங்கி உள்ளன. சில ஆலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. முத்துலாபுரம் பிர்காவில் விவசாயம் நன்றாக உள்ளது.
பட்டாசு ஆலைகள் துவங்க 300 மீட்டர் சுற்றளவில் கோவில், நீர்நிலைகள், தோட்டம், இடுகாடு போன்றவைகள் இருக்கக்கூடாது.
அந்த விதிமுறைகளை பின்பற்றாமல், அதிகாரிகள் விளைவுகளை பற்றி கருதாமல் , நீர் நிலைகள் அருகே அனுமதி அளித்துள்ளனர்.
இதனால் நிலங்களில் அமிலத்தன்மை புகுந்து மண் மலடாகும். முத்துலாபுரம் பிர்கா மட்டுமல்லாமல் துாத்துக்குடி மாவட்டத்தின் புதுார், விளாத்திகுளம், கோவில்பட்டி தாலுகாக்களில் புதிய பட்டாசு ஆலைகள் துவங்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
கோவில்பட்டி கோட்ட விவசாய நிலங்களை பாதுகாக்கும் வகையில், அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். கோர உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பட்டாசு ஆலைகளுக்கு, துாத்துக்குடி மாவட்டத்தில் இடமளிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

