/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதிய பேருந்து நிலைய பணி விறுவிறு மார்ச் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
/
புதிய பேருந்து நிலைய பணி விறுவிறு மார்ச் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
புதிய பேருந்து நிலைய பணி விறுவிறு மார்ச் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
புதிய பேருந்து நிலைய பணி விறுவிறு மார்ச் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
ADDED : நவ 17, 2024 01:46 AM

திருவள்ளூர்,
திருவள்ளூரில் 33 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், புதிய பேருந்து நிலைய பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மார்ச் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை-திருப்பதி செல்லும் வழியில் உள்ள திருவள்ளூரில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும், 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ராஜாஜி சாலையில் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில், செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில், 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும்.
பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி, குறுகலாக இருப்பதால், பேருந்துகள் வந்து செல்வதில், சிரமமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால், பொதுமக்களும், பயணியரும் நெரிசலில் சிக்கித்தவித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வாக, திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில், 5 ஏக்கர் நிலத்தில், 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கியது.
இடையில் சில காலம் மந்தமாக நடைபெற்று வந்த நிலையில், நகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரரை பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
இதையடுத்து, பேருந்து நிலைய கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் கூறியதாவது:
வேடங்கிநல்லுாரில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம், 5,889 ச.மீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது. தரைத்தளம் மற்றும் மாடி என, 2,493 ச.மீட்டர் பரப்பில்பிரதான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில், வெளியூர் பேருந்து-45, நகர பேருந்து-11 என, 56 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளது.
மேலும், 107 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. பயணியர் வசதிக்காக, 550 இருசக்கர வாகனம், 16 கார்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் துரிதமாக பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

