/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் நலத்திட்ட பணிகளில் தொய்வு இன்றி துரிதமாக மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு
/
மக்கள் நலத்திட்ட பணிகளில் தொய்வு இன்றி துரிதமாக மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு
மக்கள் நலத்திட்ட பணிகளில் தொய்வு இன்றி துரிதமாக மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு
மக்கள் நலத்திட்ட பணிகளில் தொய்வு இன்றி துரிதமாக மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு
ADDED : பிப் 20, 2025 02:09 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி வட்டத்தில், ‛உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் படி நேற்று, நாள் முழுதும் கும்மிடிப்பூண்டி பகுதியில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
மங்களம் ஊராட்சியில் வேர்க்கடலை பயிர்களை ஆய்வு செய்தபோது, வேளாண் துறையினர் மானியம் வழங்குவதில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
மங்களம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் இல்லாததால், மழைக்காலங்களில், 15 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி இருப்பதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.
அங்குள்ள ரேஷன் கடையில், ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், 20ம் தேதி ஆகும் நிலையில் இருப்புகள் அதிகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். உடனடியாக குடும்பஅட்டைதாரர்களை மொபைல்போனில் தொடர்பு கொண்டு விநியோகம் செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பின், கவரைப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், ஆலோசனை பெட்டி என்ற பெயரில், உண்டியல் வைத்திருப்பதை கண்டு, காயின் போடும் அளவிற்கு துவாரம் மட்டுமே உள்ள உண்டியலில், எப்படி ஆலோசனை கடிதம் போடமுடியும் என, கண்டித்து உடனடியாக மாற்றும்படி தெரிவித்தார்.
மேல்முதலம்பேடு கிராமத்தில், தோட்டக்கலை துறையின் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டு வரும் ஒன்றரை ஏக்கர் தர்பூசணி நிலத்தை பார்வையிட்டார்.
அப்போது, விவசாயி ஒருவர் கூறுகையில், ‛75 சதவீதம் மானியம் போக, 25 சதவீத தொகையாக, 30,000 மட்டும் செலுத்தினால் போதும் என, தெரவித்தனர். தற்போது கூடுதலாக, 30,000 செலுத்த வேண்டும் என, தோட்டக்கலை துறையினர் தெரிவிக்கின்றனர்' என, கலெக்டரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, மேல்முதலம்பேடு அங்கன்வாடியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்குள்ள பராமரிக்கப்பட்டு வரும் பதிவேட்டுகளில் உள்ள தவறுகளை சுட்டி காட்டினார். குழந்தைகளிடம் கேள்விகளை கேட்டு பரிசுகளை வழங்கினார்.
கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவர்களை, விளையாட்டு நேரத்தில், வகுப்பறையில் வைத்து பாடம் எடுப்பதை கண்டித்தார்.
கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், பயணிகளுக்கு நிழற்குடை இல்லாத நிலையில், எப்படி பேருந்து நிலைய வளாகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி, கூரையுடன் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள் என, பேரூராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார். முதலில் நிழற்குடை கட்டி முடிக்க வேண்டும் என, தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி வேளாண் விரிவாக்க மையத்தில், குறைந்த அளவே விவசாயிகள் பதிவு செய்திருப்பதை சுட்டிகாட்டி, உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றதுடன், சில பயனாளிக்கு அரசாணைகளை வழங்கினார்.
பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கூடி பேசினார். நேற்று, கும்மிடிப்பூண்டியில் அந்தந்த துறை சார்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர், நாள் முழுதும் கலெக்டர் மேற்கொண்ட ஆய்வின் போது, மக்கள் தெரிவித்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை எச்சரித்து, மக்கள் நலதிட்ட பணிகளில் தொய்வு இன்றி துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

