/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழை நின்றும் தண்ணீரில் மிதக்கும் குடியிருப்புகள்: உள்ளாட்சிகளின் அலட்சியத்தால் வெளியேறாத அவலம்
/
மழை நின்றும் தண்ணீரில் மிதக்கும் குடியிருப்புகள்: உள்ளாட்சிகளின் அலட்சியத்தால் வெளியேறாத அவலம்
மழை நின்றும் தண்ணீரில் மிதக்கும் குடியிருப்புகள்: உள்ளாட்சிகளின் அலட்சியத்தால் வெளியேறாத அவலம்
மழை நின்றும் தண்ணீரில் மிதக்கும் குடியிருப்புகள்: உள்ளாட்சிகளின் அலட்சியத்தால் வெளியேறாத அவலம்
UPDATED : டிச 14, 2025 06:37 AM
ADDED : டிச 14, 2025 06:35 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை நின்று ஒரு வாரமாகியும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரால், வெளியேற வழியின்றி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதற்கு வடிகால்வாய்களை முறையாக துார் வாராத, உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியமே காரணம் என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த, அக்., 16ம் தேதி துவங்கியது. நவம்பர் மாதத்தில், அவ்வப்போது, மாவட்டம் முழுதும் பலத்த மழை பெய்தது. மேலும், 'டிட்வா' புயல் காரணமாக, நவ., இறுதியில், மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம், புழல், பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் ஒன்றியங்களில், கனமழை பெய்தது.
இதன் காரணமாக, அப்பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, ஆவடி மாநகராட்சியில் 200 கி.மீ., 6 நகராட்சிகளில் 230 கி.மீ., 14 ஒன்றியங்களில் 370 கி.மீ., மற்றும் 8 பேரூராட்சிகளில் 138 கி.மீ., துாரம் மழைநீர் வடிகால்வாய் துார் வாரப்பட்டுள்ளதாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்தது.
இதன் காரணமாக, மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்தது.
இருப்பினும், மழை விட்டு, ஒரு வாரத்திற்கு மேலாகியும் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில், மழைநீர் வடியாமல் தேங்கி உள்ளது.
திருவள்ளூர் ஒன்றியத்தில், புட்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமம், தண்ணீர்குளம் ஊராட்சி, தலக்காஞ்சேரி ஊராட்சிகளில், மழைநீர் வடியாமல், இரண்டு அடிக்கு மேல் தேங்கி உள்ளது.
மீஞ்சூர் ஒன்றியம் வாயலுார் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகள் மற்றும் திருநின்றவூர், பூந்தமல்லி நகராட்சி, ஆவடி மாநகராட்சி உட்பட பல பகுதிகளில், மழைநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி உள்ளது.
திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி, தாமரைகுளம் தெருவைச் சேர்ந்த, ராஜேஸ்வரி கூறியதாவது:
நாங்கள், 40 ஆண்டுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக, மழைநீர் வெளியேறாமல், வீடுகளை சுற்றிலும் தேங்கி விடுகிறது.
புட்லுார் பகுதியில் இருந்து வரும் மழைநீர், காக்களூர் கிராமம், சிட்கோ வழியாக, ராமாபுரம், தண்ணீர்குளம் பகுதிக்கு வருகிறது. இங்கிருந்து வடிகால்வாய் அமைக்காததால், தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கி விடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மீஞ்சூர் ஒன்றியம், வாயலுார் ஊராட்சியைச் சேர்ந்த சீனிவாசன் கூறியதாவது:
மீஞ்சூர் ஒன்றியத்தில், ஒவ்வொரு மழை காலத்திலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. அங்குள்ள எஸ்.எம்.நகர், இந்திரா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதுடன், மேலும் பலர் வீடு கட்டி வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் இங்குள்ள வடிகால்வாய்களை முறையாக துார் வாராததால், அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறாமல், தேங்கி விடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கழிவுநீராக மாறியதால் துர்நாற்றம்
திருவள்ளூர் ஒன்றியம் தலக்காஞ்சேரி குடியிருப்பு பகுதியில் உள்ள, தெருக்களில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியது. வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், வெளியேற முடியாமல், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீர், மழைநீரோடு கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், தேள், பாம்பு போன்ற விஷ பூச்சிகள் தொல்லையாலும், கொசுக்களாலும், வீட்டை விட்டு செல்ல முடியாத நிலை உள்ளது
திருவள்ளூர் நகராட்சி, பெரியகுப்பம் பாரதி தெருவில், புட்லுார் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி, குளமாக மாறிவிட்டது. வீடுகளைச் சுற்றிலும், கழிவுநீராக மாறியதால், கொசு உற்பத்தியாவதுடன், துர்நாற்றத்தால், மக்கள் பரிதவித்து வருகின்றனர்
காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கி உள்ளது. மாணவ - மாணவியர் பள்ளிக்குச் செல்வோர், முழங்கால் அளவு தண்ணீரில் அவதிப்பட்டு செல்கின்றனர்.

