/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா கொடியேற்றம்
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா கொடியேற்றம்
ADDED : மார் 15, 2024 08:00 PM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இன்று காலை, 9 :00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர், திருவாலங்காடின் முக்கிய வீதிகளில், வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.
விழாவின், 7ம் நாளான வரும் 21ம் தேதி கமலத்தேர் விழா நடக்கிறது. 22ம் தேதி இரவு: 9:00 மணிக்கு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைப்பெறும். 24ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜர் வீதியுலா, இரவு 8:00 மணிக்கு சென்றாடு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.
l திருத்தணி முருகன் கோவிலில், நேற்று பங்குனி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககிரீடம், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை, 9:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தேர் வீதியில் ஒரு முறை வலம் வந்து அருள்பாலித்தார்.
நேற்று கிருத்திகை விழா என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.

