/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டூர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து முழு கொள்ளளவு தேக்க திட்டம்
/
காட்டூர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து முழு கொள்ளளவு தேக்க திட்டம்
காட்டூர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து முழு கொள்ளளவு தேக்க திட்டம்
காட்டூர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து முழு கொள்ளளவு தேக்க திட்டம்
ADDED : அக் 29, 2024 03:42 AM

பொன்னேரி : பொன்னேரி அடுத்த காட்டூர், தத்தமஞ்சி கிராமங்களில் உள்ள, 614 ஏக்கரில் இரண்டு பாசனஏரிகள் அருகருகில் அமைந்துள்ளன.
இந்த ஏரிகளுக்கு, ஆரணி ஆற்றில் உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து கால்வாய் வாயிலாக மழைநீர் சேமிக்கப்படுகிறது.
மழைக்காலத்தில், இரண்டு ஏரிகளிலும், 0.053 டி.எம்.சி., சேமிக்கப்பட்டு, காட்டூர், தத்தமஞ்சி, அத்தமஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், இந்த ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மற்றும் மழைநீர் மட்டுமே விவசாயிகளின் பாசன ஆதாரமாக இருக்கிறது.
இந்த ஏரிகளில் தேங்கும் தண்ணீரை கொண்டு, 1,700 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக மேற்கண்ட இரண்டு ஏரிகளையும் நீர்தேக்கமாக மாற்ற திட்டமிடப்பட்டு, கடந்த, 2020ல், 62 கோடி ரூபாயில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏரிகளை சுற்றிலும், 5 மீ. உயரம், 9.3 கி.மீ., சுற்றளவிற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டன. விவசாயத்திற்காக தண்ணீரை வெளியேற்றுவதற்காக தேவையான இடங்களில் மதகு கிணறுகளும் அமைக்கப்பட்டன.
நீர்த்தேக்கத்திற்கான பணிகள் முடிந்த நிலையில், தற்போது ஏரிக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது.
லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதை தொடர்ந்து, அங்குள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அது கால்வாய் வழியாக ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் கோடையின்போது வறண்டு கிடந்த காட்டூர், தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து துவங்கி உள்ளது. அடுத்து வரும் நாட்களில், பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால், நீர்தேக்கம் விரைவாக அதன் கொள்ளளவை எட்டிவிடும் என நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேற்கண்ட இரண்டு ஏரிகளிலும், 0.35டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்பதால், இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

