/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவில் தேர்வீதி விரிவாக்கம் மண் பரிசோதனை துவக்கம்
/
திருத்தணி கோவில் தேர்வீதி விரிவாக்கம் மண் பரிசோதனை துவக்கம்
திருத்தணி கோவில் தேர்வீதி விரிவாக்கம் மண் பரிசோதனை துவக்கம்
திருத்தணி கோவில் தேர்வீதி விரிவாக்கம் மண் பரிசோதனை துவக்கம்
ADDED : செப் 11, 2024 01:17 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களிலிருந்து தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். மேலும் ஆடிக் கிருத்திகை, திருப் படி திருவிழா, ஆடிப்பூரம், கார்த்திகை தீபம் போன்ற முக்கிய விழாக்களின் போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்து, தேர்வீதியில் பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மாஸ்டர் பிளான் திட்டத்தின் மூலம் பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
மாஸ்டர் பிளான் திட்டத்தின் மூலம் முருகன் கோவில் தேர்வீதி விரிவாக்கம், ராஜகோபுர இணைப்பு படிகள் அமைத்தல், கோவில் தலைமை அலுவலகம் பின்புறம், 40 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும், 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டடடம், யானை மண்டபம், மலைப்பாதை நிழல் மண்டபம் போன்ற கட்டுமான பணி நடைபெறுகிறது.
கடந்த ஜூன் மாதம் சென்னை ஐ.ஐ.டி., சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் திருத்தணி முருகன் கோவிலில் தேர் வீதியில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை ஆய்வு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று தேர்வீதி விரிவாக்கம் செய்வதற்கு நவீன இயந்திரங்கள் மூலம் மண் பரிசோதனை செய்யும் பணி துவங்கியது.
மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் விரைவில் திருத்தணி முருகன் கோவில் தேர்வீதி விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கும் என, கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

