/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மன் கோவிலில் 'ரிலீஸ்' பக்தர்கள் கடும் கண்டனம்
/
அம்மன் கோவிலில் 'ரிலீஸ்' பக்தர்கள் கடும் கண்டனம்
ADDED : ஏப் 21, 2024 12:02 AM
திருவேற்காடு:சென்னை, திருவேற்காடு, சன்னிதி தெருவில் புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்கு, பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தன்று, கோவில் தர்மகர்த்தா வளர்மதி மற்றும் கோவில் பெண் பணியாளர்கள் சிலர் சேர்ந்து, கோவில் வளாகத்தில் 'ரீல்ஸ்' எனும் வீடியோவை பதிவு செய்தனர்.
இதில், 'அரசு' படத்தில் நடிகர் வடிவேலு பேசும் 'என்னுடைய ராஜினாமா கடிதம்' என்பதுபோல் நடிப்பது, 'இதுபோல சொந்தம் உள்ளதா இறைவா... உனக்கு நன்றி சொல்கிறோம் இறைவா' என்ற பாடலுக்கு நடனமாடுவது என வீடியோ எடுத்துள்ளனர்.
தேவி கருமாரி அம்மன் படத்திற்கு கீழ் நாற்காலியில் அமர்ந்து, பக்தர்கள் முன் அவர்கள் எடுத்த இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு, பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்டோர் மீது அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

