/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிலுவையில் எப்.ஐ.ஆர்., வழக்குகள் விரைந்து முடிக்க நீதிபதி உத்தரவு
/
நிலுவையில் எப்.ஐ.ஆர்., வழக்குகள் விரைந்து முடிக்க நீதிபதி உத்தரவு
நிலுவையில் எப்.ஐ.ஆர்., வழக்குகள் விரைந்து முடிக்க நீதிபதி உத்தரவு
நிலுவையில் எப்.ஐ.ஆர்., வழக்குகள் விரைந்து முடிக்க நீதிபதி உத்தரவு
ADDED : மே 21, 2024 06:37 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆர்., வழக்குகள் 43,740 நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் ஆகிய பகுதிகளில் குற்றவியல் நீதிமன்றங்கள் உள்ளன.
செங்கல்பட்டு, ஆலந்துார் பகுதிகளில் கூடுதல் மகிளா நீதிமன்றம் உள்ளன. இந்த நீதிமன்றங்களில், செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், 20 காவல் நிலையங்கள், மூன்று மகளிர் காவல் நிலையம், மூன்று மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் என, 26 காவல் நிலையங்கள் உள்ளன.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், 26 காவல் நிலையங்கள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில், ஆலந்துார் பகுதியில், 24 காவல் நிலையங்கள் உள்ளன.
இந்த காவல் நிலையங்களில் தகராறு, திருட்டு, கொலை முயற்சி, கொலை வழக்கு மற்றும் எரிசாராய வழக்கு மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை, நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த வழக்குகளில் போலீசார் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகையை நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, முதல் தகவல் அறிக்கை நிலையில் உள்ள 43,740 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதைத் தொடர்ந்து, குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க நீதித்துறை, காவல் துறை இணைந்து ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், கூடுதல் எஸ்.பி., வேல்முருகன், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் நீதிபதிகள், போலீஸ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், வழக்குகள் விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அதன்பின், நீதிபதி ஜெயஸ்ரீ பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வழக்குகளை, போலீசார் விரைந்து முடிக்க வேண்டும்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக, அரசு வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து, தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்குகளை விரைந்து முடிக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகளில், பிடிவாரன்ட் உள்ளவர்களை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி பேசினார்.
முதல் தகவல் அறிக்கை நிலையில் 43,740 வழக்குகளும், பிடிவாரன்ட் நிலையில் 2,316 வழக்குகளும், கொலை, கொள்ளை உள்ளிட்டவற்றில் 19,539 வழக்குகளும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிபதிகள் மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலோசிக்கப்பட்டது.

