/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
எஸ்.ஐ., போலீசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
/
எஸ்.ஐ., போலீசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : செப் 11, 2025 11:31 PM
திருநெல்வேலி:திருமணம் முடிந்த ஐந்தே நாட்களில், நிபந்தனை ஜாமீனுக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்ற இளைஞரை தாக்கி, அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த எஸ்.ஐ., போலீஸ் மீது மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டி, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே டோனாவூரை சேர்ந்தவர் ஜோசப் செல்வகுமார். சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். 2018 ஜூலை 14 ல் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு ஆக.,20 திருமணம் நடக்க இருந்தது.
இதற்காக வீட்டில் பெயின்ட் அடித்தனர். ஜோசப் செல்வகுமார் வீட்டினருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெபத்தாய் முன்விரோதம் இருந்தது. வீட்டில் பெயின்ட் அடித்த நெல்சன் என்பவருடன் பக்கத்து வீட்டு பெண் தகராறு செய்தார். அந்த பெண் மீது, நெல்சன் பெயின்டை ஊற்றி விட்டார். இது தொடர்பாக ஜெபத்தாய் ஏர்வாடி போலீசில் நெல்சன், ஜோசப் செல்வகுமார் மீது புகார் கொடுத்தார்.
போலீசார் ஜோசப் செல்வகுமார் மீதும் வழக்கு பதிவு செய்தனர். 2018 ஆக., 20 ல் திருமணம் நடந்தது.
இதையொட்டி அவர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். திருமணத்திற்கு பின் நிபந்தனை ஜாமீனுக்காக ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் ஆஜராகச் சென்றார்.
ஆக., 24ல் அங்கு பணியாற்றிய எஸ்.ஐ., இம்மானுவேல், போலீஸ்காரர் முத்துக்குமார், “எப்படி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கினாய்” என்று திட்டி தாக்கினர். அவரது அலைபேசியை பறித்தனர்.
திருமணமாகி 5வது நாளில் அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசி என்ற பெண்ணிடம் புகார் பெற்று இன்னொரு புதிய வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். அந்த வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஜோசப் செல்வகுமார் தமிழக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வேண்டுமென்றே அன்பரசி என்ற தனக்கு தெரியாத பெண்ணிடம் புகார் பெற்று தன்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தனக்கு நடந்த மனித உரிமை மீறல் என புகார் செய்திருந்தார்.
சில ஆண்டுகளாக நடந்த விசாரணையில் போலீசார் மனித உரிமையை மீறியுள்ளனர் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ரூ.1 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு ஜோசப் செல்வகுமாருக்கு 4 வாரங்களுக்குள் வழங்க மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டார்.
அதில் எஸ்.ஐ., இம்மானுவேல், போலீஸ்காரர் முத்துக்குமார் ஆகியோரிடமிருந்து தலா ரூ.50 ஆயிரம் அரசு வசூலிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.