/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
/
கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
ADDED : மார் 15, 2026 06:25 AM

திருநெல்வேலி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உருவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜின் 22 டன் தள்ளுவிசையில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதற்கு முன் 19 டன் தள்ளுவிசையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. தற்போது முதல் முறையாக 22 டன் தள்ளுவிசையில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த கிரையோஜெனிக் இன்ஜின், இந்தியாவின் கனரக ஏவுகணை வாகனத்தின் மேல்பகுதியை இயக்கும் முக்கிய இன்ஜினாகும். எதிர்காலத்தில் ஏவுகணை வாகனத்தின் சுமை திறனை அதிகரிக்கும் நோக்கில் கிரையோஜெனிக் இன்ஜின் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக 22 டன் தள்ளுவிசையில் செயல்படும் வகையில் இன்ஜின் மேம்படுத்தப்பட்டது.
இந்த சோதனையில் 22 டன் தள்ளுவிசையுடன் 165 வினாடிகள் தொடர்ந்து இன்ஜின் இயங்கியதாகவும், செயல்பாடுகள் எதிர்பார்த்தபடி இருந்ததாகவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வகை கிரையோஜெனிக் இன்ஜினை சோதிப்பது மிகப்பெரிய தொழில்நுட்ப சவாலாக கருதப்படுகிறது. இந்த சோதனைக்காக பயன்படுத்தப்பட்ட இதே இன்ஜின் மூலம் இதுவரை 20 முறை வெற்றிகரமாக சோதனை நடத்தப் பட்டுள்ளது.

